செந்தில் பாலாஜி – எஸ்.பி.வேலுமணி சந்திப்பின் பின்னணி இது தான்..!

Advertisements

எதிரும் புதிருமாக இருந்து வந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் நேற்று சட்டசபை வளாகத்தில் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையில் தவெக முதலிடத்திற்கும், திமுக இரண்டாம் இடத்திற்கும் சென்றது. அதிமுக மூன்றாம் இடத்திற்குச் சென்றது. நாம் தமிழர் கட்சி 4வது இடத்திற்குச் சென்றது. அக்கட்சி எந்த தொகுதியிலும் வெற்றிபெறவில்லை.

அதிமுகவின் பொதுச்செயலாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றபின் அந்த கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. அதுவும் இந்த முறை எதிர்க்கட்சியாக கூட அதிமுக அமர முடியாத நிலை. இதனால், எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் தனியாக செயல்பட தொடங்கியிருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக அவர்கள் அதிமுக எம்எல்ஏக்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி வேலுமணியை தேர்ந்தெடுப்பது என முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதலில் சட்டமன்றத்தில் பழனிசாமியின் பதவியை பறித்துவிட்டு அடுத்ததாக எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு முக்கிய பதவிக்கு அவர்கள் வருவதற்கும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு அதிமுகவினர் டீம் டீமாக பிரிந்து வந்து தங்களுக்கிடையேயான பிளவை வெளிப்படையாக காட்டினர். அதிமுகவில் பிளவு என செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அவர்களின் எம்.எல்.ஏக்கள் தனித்தனி அணிகளாகப் பிரிந்து அவைக்கு வந்திருந்தனர்.

அதிமுக பிளவை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக நேற்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி எடுத்தபோது சிலர் மட்டுமே மேஜையை தட்டிய நிலையில், எஸ்.பி வேலுமணி உறுதிமொழி எடுத்தபோது பலர் மேஜையை தட்டி உற்சாகமாக வரவேற்றனர்.

இந்நிலையில் சட்டசபை நிகழ்வுகள் முடிந்தபிறகு சட்டப்பேரவை வளாகத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி – செந்தில் பாலாஜி சுமார் 30 நிமிடங்கள் பேசியுள்ளனர். அதிமுகவில் தலைமையை மாற்றுவதற்கு கலகக் குரல் எழுந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் மாற்றம், சட்டமன்ற அதிமுக கட்சி தலைவர் பதவி விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் பரபரக்கின்றன.

அதிமுகவில் பூகம்பம் வெடித்து வரும் நிலையில், சட்டசபை வளாகத்தில் எதிரும் புதிருமாக இருந்து வந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *