“ரீல்ஸ் ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” – செல்லூர் ராஜு விமர்சனம்!

மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை ஸ்காட் ரோடு பகுதியில் உள்ள அவர்களது சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

சுகாதாரத் துறை ஊழியர்கள் சமூக வலைத்தளங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் அரசுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பது தொடர்பான சுற்றறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜு, இது ஜனநாயக நாடு என்றும், அரசு ஊழியர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பது சர்வாதிகாரப் போக்காக மாறிவிடும் என்றும் விமர்சித்தார்.

பண்டிகைக் காலத்தில் விலைவாசி உயர்ந்துள்ள நிலையில், அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.   சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

டெல்டா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கர்நாடகத்திடமிருந்து குறைந்தபட்சம் 15 டிஎம்சி தண்ணீரைப் பெற அரசு முயற்சி செய்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.   சென்னையில் மழைநீர் தேங்கும் பிரச்சினையைச் சுட்டிக்காட்டி, மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

கடந்த ஆட்சியில் இருந்த பிரச்சினைகளே தொடர்வதாகக் கூறிய அவர், அரசு நிர்வாகத்தைச் சீரமைத்து மக்களுக்கான மாற்றங்களைச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.   ரீல்ஸிலையே ஆட்சியையும் கட்சியையும் நடத்தி விடலாம் என நினைத்தால் மக்கள் நிச்சயமாக விரைவிலே இந்த அரசுக்கு சரியான பாடத்தை புகட்டுவார்கள்.

மேலும், காவிரி பிரச்சினை, மழை பாதிப்புகள் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டங்கள் குறித்து அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *