பாரா ஆசிய விளையாட்டில் தமிழக வீரர்கள் அசத்தல் !

ஜப்பானில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 13 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பேட்மிண்டன் போட்டியில் 9 பேரும், டேபிள் டென்னிஸ் போட்டியில் 2 பேரும், தடகளம் மற்றும் வலுதூக்குதலில் தலா ஒருவரும் கலந்து கொண்டனர்.

இதில், 9 வீரர், வீராங்கனைகள் 15 பதக்கங்களை வென்று சாதித்தனர்.  3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கல பதக்கத்தை தமிழக வீரர், வீராங்கனைகள் கைப்பற்றினார்கள்.  தடகளத்தில் தர்மராஜ் சோலைராஜ் தங்கம் வென்றார். நீளம் தாண்டுதல் டி64 பிரிவில் அவர் முதல் இடத்தை பிடித்து தமிழகத்திற்குபெருமை சேர்த்தார்.

பேட்மிண்டனில் துளசி மதி முருகேசன் 3 பதக்கங்களை வென்றார்.  அவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் தங்கமும், ஒற்றையர் பிரிவில் வெள்ளியும் , கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளியும் பெற்றார்.  பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்.எல்.4 பிரிவில் நவீன் சிவக்குமார் தங்கம் வென்றார். இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். அவருக்கு மொத்தம் 2 பதக்கம் கிடைத்தது.

இதே போல பேட்மிண்டனில் நித்யஸ்ரீ சுமதி சிவனும் 2 பதக்கம் பெற்றார். அவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளியும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலமும் பெற்றார்.  கஸ்தூரி மணிஷா ராம்தாசும் 2 வெண்கல பதக்கம் பெற்றார்.  அவர் பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் பதக்கத்தை கைப்பற்றினார்.

பேட்மிண்டன் வீரர் சிவராஜன் சோலைமலை கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.  டேபிள் டென்னீஸ் வீரரான மதனும் 2 பதக்கம் பெற்றார்.  அவர் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவிலும், இரட்டையர் கிளாஸ் எம்.டி.8 பிரிவிலும் வெண்கலம் வென்றார். வலுத்தூக்கும் போட்டியில் பெண்களுக்கான 67 கிலோவுக்கும் மேற்பட்ட பிரிவில் கஸ்தூரி ராஜா மணி வெள்ளிப்பதக்கம் பெற்றார்.  டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு கிளாஸ் 9 பிரிவில் பேபி சகானா ரவி வெண்கல பதக்கம் பெற்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *