
சென்னை:
சென்னைப் பல்கலை உட்பட மூன்று பல்கலைகளுக்கு, துணைவேந்தர்களை தேர்வு செய்ய, தமிழக அரசு எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், யு.ஜி.சி., எனும் பல்கலை மானியக் குழு சார்பில் ஒரு பிரதிநிதியைச் சேர்த்து, தேடல் குழுவைக் கவர்னர் ரவி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில், சென்னைப் பல்கலை, கோவை பாரதியார் பல்கலை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை ஆகியவற்றில், துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. வழக்கமாக, துணைவேந்தர்களை தேர்வு செய்ய, கவர்னர் தேடுதல் குழுவை நியமிப்பார். இதற்கு அரசு சார்பில் அரசாணை வெளியிடப்படும்.
தேடுதல் குழுவில், கவர்னர், பல்கலை சிண்டிகேட், செனட் சார்பில் தலா ஒரு உறுப்பினர் இடம் பெறுவர். இக்குழு மூன்று பேர் பெயரை, கவர்னருக்கு பரிந்துரை செய்யும். அதில் ஒருவரை துணைவேந்தராக, கவர்னர் தேர்வு செய்வார்.
இதன் அடிப்படையில், பல்கலை சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் பெயரைப் பரிந்துரை செய்து, தேடுதல் குழு அமைக்கும்படி, கவர்னருக்கு அரசு தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், தேடுதல் குழுவில், யு.ஜி.சி., சார்பில் ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என, கடந்த ஆண்டு கவர்னர் அறிவுறுத்தினார்.
இதைத் தமிழக அரசு ஏற்கவில்லை. இதனால், பல்கலை துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கு, தேடுதல் குழு அமைக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து, கடந்த 31ம் தேதி, நம் நாளிதழில் விரிவாகச் செய்தி வெளியிடப்பட்டது.
மாநில பல்கலைக்கு துணைவேந்தரை நியமிக்க, யு.ஜி.சி., விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. யு.ஜி.சி., சார்பில் உறுப்பினரைச் சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லையென, தமிழக அரசு சார்பில் கவர்னருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக, நேற்று முன்தினம் தகவல் வெளியானது.
நேற்று மூன்று பல்கலைகளுக்கும், யு..ஜி.சி., சார்பில் ஒரு பிரதிநிதியைச் சேர்த்து, நான்கு பேர் கொண்ட தேடுதல் குழுவைக் கவர்னர் ரவி நியமித்தார். இதன் விபரம் www.tnrajbhavan.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலை துணைவேந்தர் தேடல் குழுவில், கவர்னர் தரப்பில் கர்நாடகா மத்திய பல்கலை துணைவேந்தர் பட்டுச் சத்யநாராயணா; சிண்டிகேட் சார்பில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தீனபந்து; செனட் சார்பில் பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன்; யு.ஜி.சி., சார்பில் தெற்கு பீகார் மத்திய பல்கலை முன்னாள் துணைவேந்தர் ரத்தோர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். குழு ஒருங்கணைப்பாளராகப் பட்டுச் சத்யநாராயணா செயல்படுவார்.
கோவை பாரதியார் பல்கலை தேடல் குழுவில், அரசு தரப்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டேவிதார்; சிண்டிகேட் சார்பில், சென்னைப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் துரைசாமி; செனட் தரப்பில் பாரதியார் மற்றும் சென்னைப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் திருவாசகம்; யு.ஜி.சி., சார்பில் பெங்களூரு பல்கலை முன்னாள் துணைவேந்தர் திம்மேகவுடா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குழு ஒருங்கிணைப்பாளராக டேவிதார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் தேடல் குழுவில், கவர்னர் சார்பில் யு.ஜி.சி., உறுப்பினர் சுஷ்மா யாதவா; அரசு சார்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அலாவுதீன்; சிண்டிகேட் சார்பில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை முன்னாள் துணைவேந்தர் பத்மநாபன்; யு.ஜி.சி., சார்பில் தெற்கு பீகார் மத்திய பல்கலை முன்னாள் துணைவேந்தர் ரத்தோர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குழு ஒருங்கிணைப்பாளராகச் சுஷ்மா யாதவா செயல்படுவார்.
சென்னை பல்கலை மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலை தேடல் குழுவில், யு.ஜி.சி., சார்பில் ஒரே நபரையே கவர்னர் நியமித்துள்ளார்.
கவர்னர் தேடல் குழு நியமித்துள்ளது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடுவதுடன், அதை அரசிதழில் வெளியிட வேண்டும். அரசு என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மூன்று பல்கலைகளுக்கும் துணைவேந்தரை தேர்வு செய்ய, தேடல் குழு அமைக்கப்பட்ட விபரம், அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என, கவர்னர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.



