schools opening:கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகள்!

Advertisements

கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

சென்னை:தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8-ந் தேதிவரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் வந்ததால், இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ந் தேதி வரையும், 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23-ந் தேதி வரையும் ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

வழக்கமாகப் பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந் தேதி வெளியாக இருந்ததால், 6-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதனிடையே கடும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாகப் பள்ளிகள் திறப்பை தள்ளிப்போடுமாறு எழுந்த கோரிக்கைகளை அடுத்து, 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கோடை விடுமுறையில் குதூகலித்திருந்த மாணவ-மாணவிகள் பள்ளி வாசலைத் தொட்டதுமே பரவசம் ஆனார்கள். தங்களது நண்பர்களைப் பார்த்து ஆனந்தம் அடைந்தனர். ஆசிரியர்களைப் பார்த்து நலம் விசாரித்தனர்.

புதிய கல்வியாண்டை தொடங்கும் உற்சாகத்துடன் மாணவ-மாணவிகள் வகுப்புக்குள் நுழைந்தனர். அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோடை விடுமுறைக்கு பின்னர் வந்த மாணவர்களுக்குப் பள்ளி ஆசிரியர்கள் இனிப்பு வழங்கியும் வரவேற்றனர்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் இன்றே வழங்கப்பட உள்ளன. தமிழக அரசின் சார்பில் புத்தகப்பை, காலணி, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ண பென்சில் மற்றும் கிரையான்கள், ஜாமின்ட்ரி பாக்ஸ் உள்ளிட்டவையும், அவை அவசியப்படும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *