சுதந்திரப் போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு செப்டம்பர் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் பொதுவிடுமுறைகளை தவிர்த்து அந்தந்த மாவட்டங்களில் பண்டிகை மற்றும் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த விடுமுறைக்கான உத்தரவை மாவட்ட அளவில் அந்தந்த ஆட்சியர்கள் பிறப்பிக்கின்றனர். அன்றைய தினம் பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சுதந்திரப்போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரன். இவர் தென் மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடினார். இவரது நினைவு தினம் வரும் செப்டம்பர் 11ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் செப்டம்பர் 11-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் சட்டம் – ஒழுங்கை பராமரிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது. குறிப்பாக இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக செப்டம்பர் மாதம் 21ம் தேதி 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.