சபாநாயகர் சீட்டில் சத்யபாமா.! அவையை தெறிக்கவிட்ட தவெக பெண்.!

Advertisements

முதன்முறையாக வரலாற்று  சிறப்பு மிக்க சபாநாயகர் இருக்கையில் ஒரு பெண் அமர்ந்து அசத்தல் சாதனை புரிந்துள்ளார். அது யார் எதற்காக அமர வைக்கப்பட்டார், அவருக்கு சட்டமன்ற சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுத்த வாழ்த்த மடலை நம்  ஜெம் தொலைக்காட்சி மூலம் பார்க்கலாம்

திருப்பூர் வடக்கு தொகுதி தவெக எம்எல்ஏவான சத்யபாமா, மாற்று சபாநாயகராக பொறுப்பேற்று தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து இன்று அவையை வெற்றிகரமாக நடத்தி, பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.. பொதுவாக, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேரவையில் இல்லாதபோது, துணை சபாநாயகர் ரவி சங்கர் அவையை வழிநடத்துவார்..

ஆனால் இன்றைய தினம், குறிப்பிட்ட அந்த நேரத்தில், சபாநாயகர், துணை சபாநாயகர் இருவருமே இல்லாத சூழல் ஏற்பட்டது.. இதனால் தற்போதைய சட்டசபையின் மாற்று பேரவை தலைவர்களில் ஒருவரான தவெகவின் திருப்பூர் வடக்கு தொகுதி பெண் சட்டமன்ற உறுப்பினர் சத்யபாமா, இன்று முதன்முறையாக சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து அவையை வெற்றிகரமாக வழிநடத்தினார்.

தடையின்றி பேரவையை நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட “மாற்று தலைவர்கள் குழுவின்” மூலம் இந்த வரலாற்றுச் சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை வரலாற்றில் பெண்மணி ஒருவர் இந்த உயர்வான இருக்கையில் அமர்ந்து அவையை நடத்த வேண்டும் என்பது நீண்ட காலமாக எல்லோரிடத்திலும் இருந்த எதிர்பார்ப்பாகும். அந்த பெருமைக்குரிய இருக்கையில் அமர்ந்து தவெக பெண் எம்.எல்.ஏ. சத்யபாமா நடுநிலையோடு திறம்படச் செயலாற்றியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், அதைவிட அவையில் நிகழ்ந்த தருணங்கள் அதை விட சுவாரஸ்யத்தை தந்துவிட்டது.

சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்தபோது, மாற்று சபாநாயகரான சத்யபாமா குறுக்கிட்டு, “மாண்புமிகு உறுப்பினர் அவர்களே.. 15 நிமிடம் ஆகிவிட்டது.. விரைவாக முடித்தால் நன்றாக இருக்கும். நன்றி” என்று பணிவுடன் கூறினார்..

பிறகு அமைச்சர் ஸ்ரீநாத் பதில் சொல்வதற்காக எழுந்தார்.. அப்போது “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே” என்றார். ஆரம்பமே தவறாகி சொதப்பிய நிலையில், உடனே குறுக்கிட்ட சத்யபாமா, பேரவை தலைவர் இல்லை, மாற்று பேரவைத் தலைவர் என்று திருத்தினார்..

இதற்கு பிறகு, அனிதா ராதாகிருஷ்ணன் பேசி கொண்டிருக்கும்போது, “18 நிமிடமாகிவிட்டது.. இன்னும் 9 பேர் பேச உள்ளனர்.. கொஞ்சம் சீக்கிரமா முடிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். அடுத்ததாக எம்.எஸ்.ரவி எம்எல்ஏவை பேச அழைத்தார். சபையை சத்யபாமா வழிநடத்தி கொண்டிருப்பதை அவையில் அத்தனை பேரும் ரசித்து பார்த்து கொண்டிருந்தனர்.

பிறகு திடீரென திமுகவை சேர்ந்த தங்கம் தென்னரசு எழுந்து, “மாண்புமிகு மாற்று பேரவைத் தலைவர் அவர்களே! லேடி வெல்லிங்டன் இந்த சட்டப்பேரவைக்கு வழங்கிய ஆசனத்தில் ஒரு பெண்மணி, இங்கே பேரவைத் தலைவராக அமர வேண்டும் என்பது நீண்ட காலமாக எல்லோரிடத்திலும் இருக்கக்கூடிய எதிர்பார்ப்பு. இன்றைக்கு மாற்று தலைவராக நீங்கள் அந்த இருக்கையிலே அமர்ந்திருப்பதை பார்க்கிற போது உள்ளபடியே பேரவை உறுப்பினர்கள் அனைவரும் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்” என்றார்..

உடனே பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் சத்யபாமாவுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனர். அதற்குள் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அவைக்குள் வந்துவிட்டார்.. மாற்று சபாநாயகர் சத்யபாமா உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகில் வந்து நின்றார். சபாநாயகரை கண்டதுமே, சத்யபாமா சபாநாயகர் இருக்கையிலிருந்து எழுந்து சென்றார்.

பிறகு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசும்போது, “மாண்புமிகு தற்காலிக அவைத் தலைவராக இருந்த சகோதரி, சபையை மிக சிறப்பாக நடத்திக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். இதுபோன்ற தற்காலிக பொறுப்புகள் வழங்குவதன் மூலமாக பல தாங்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும், மற்ற உறுப்பினர்களின் பாராட்டைப் பெறும் வாய்ப்பும் கிடைக்கும். இதற்காக அவரை அனுமதித்தேன். அவையை ரொம்ப சிறப்பாக நடத்தினார்” என்று மீண்டும் வாழ்த்து தெரிவித்தார்.

பொதுவாக ஒரு புதிய ஆட்சி அமைந்ததும் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இல்லாத நேரத்தில் அவையை நடத்த 6 பேர் கொண்ட “மாற்றுச் சபாநாயகர்கள்” குழு நியமிக்கப்படும்.

அந்த வகையில் 17-வது சட்டமன்றத்திற்காக அறிவிக்கப்பட்ட மாற்றுச் சபாநாயகர்கள் பட்டியலில் தவெக சார்பில் சத்யபாமா, விஜய் சரவணன், மதார் பதுருதீனும், திமுக சார்பில் காதர் பாட்சா முத்துராமலிங்கமும், அதிமுக சார்பில் தளவாய் சுந்தரமும், காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பர்ட்டும் இடம்பெற்றுள்ளனர். இந்த சிறப்பு பட்டியலின் அடிப்படையில்தான் சத்யபாமா தற்போது அவையை வழிநடத்தி சட்டமன்ற வரலாற்றில் புதிய இடத்தைப் பிடித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற எம்பி தேர்தலில் திருப்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட சத்யபாமா, எதிர்த்து நின்ற பலத்த வேட்பாளர்களை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். அப்போது திருப்பூர் முழுவதும் அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடியது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றது.

அரசியல் ரீதியாக தவெக இன்னும் தனது பயணத்தின் தொடக்க கட்டத்திலேயே உள்ள நிலையில், அக்கட்சியை சேர்ந்த ஒரு பெண் எம்எல்ஏ சட்டப்பேரவையின் உயரிய இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்திய இந்த தருணம், அந்த கட்சிக்கும் சத்யபாமாவுக்கும் முக்கியமான அடையாளமாக மாறியுள்ளது.

முதல்முறையாகக் கிடைத்த இந்த வாய்ப்பை மிகச்சிறப்பாகப் பயன்படுத்தி, பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ள சத்யபாமாவின் இந்தச் செயல், தமிழ்நாட்டில் பெண்களின் அரசியல் மற்றும் தலைமைப் பண்பிற்கு ஒரு புதிய பெருமையையும் சேர்த்துள்ளது…!!

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *