முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா இன்னும் ஒரு சில தினங்களில் புதிய கட்சி ஒன்றை தொடங்குகிறார். இதன் மூலம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் மிகப் பலமான அளவில் நான்காவது அணி ஒன்று உருவாகிறது. புதிய கட்சி தொடங்கும் சசிகலா குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிடலாம் அல்லது தமிழக வெற்றி கழகத்துடன் இணையலாம் என்ற பரபரப்பு தகவலும் வெளியாகி இருக்கிறது .
தமிழக அரசியல் ஆடு களத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தோழியான சசிகலாவும் ஒரு முக்கிய தலைவராக பார்க்கப்படுகிறார். தமிழ்நாடு முழுவதும் இவருக்கு ஏராளமான ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் . அம்மா ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து பேசி வரும் சசிகலா தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊடகங்களுக்கு மட்டும் முகம் காட்டி வரும் சசிகலா தனது வீட்டிலிருந்தபடியே அதிமுகவில் மேல் இடத்து நிர்வாகிகள் பலருடனும் ரகசிய தொடர்பு வைத்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவான ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் என்றும் சொல்வார்கள் .
தற்பொழுது டிடிவி தினகரன் அதிமுகவில் இணைந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் நிலைப்பாடு என்ன என்பது வெளியே தெரியாமல் இருக்கிறது . இருந்தபோதிலும் ஓ பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைவார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மூன்றாம் தேதி அண்ணா நினைவு நாளில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலாவிடம் சட்டசபை தொடர்பாகவும் அதில் அவரது நிலைப்பாடு என்ன என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சசிகலா பதில் சொல்லும்பொழுது வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று மட்டும் பதில் அளித்தார் . இந்த நிலையில் தனது ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார் . அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் பலர் வலியுறுத்தி உள்ளனர்.மேலும் புதிய கட்சி தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஆலோசனை செய்த சசிகலா புதிய கட்சி தொடங்குவது என முடிவு செய்திருக்கிறார் இது மட்டுமில்லாமல் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தீவிர ஆலோசனை நடத்தி இருக்கிறார் . சசிகலா புதிய கட்சி தொடங்கும் வகையில் தமிழக அரசியலில் அது மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சசிகலா புதிய கட்சி தொடங்கினால் அது அதிமுகவுக்கு மட்டுமல்ல அனைத்து கரப்பு அரசியல் கட்சிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக அமையும் என கருதப்படுகிறது .
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சமயத்திலும் கூட சசிகலா போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகின . ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றதால் போட்டியிடவில்லை . அந்த சமயத்தில் நான் தற்காலிகமாக அரசியல் இருந்து ஓய்வு பெறப் போகிறேன் என்று அறிவித்த சசிகலா தற்பொழுது தீவிரமான அரசியல் களத்தில் குதித்திருக்கிறார் .
இதனிடையேசசிகலாவை அதிமுக அதிருப்தியாளர்கள் பலர் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார்கள் இதில் சில முக்கிய நிர்வாகிகளும் அடங்குவார்கள் . டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் மாணவியர் அணி செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் வழக்கறிஞர் ஜீவிதா நாச்சியார் . இவர் திருமங்கலம் சட்டசபை தொகுதி பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். ஜீவிதா நாச்சியார் தற்பொழுது, சசிகலாவை சந்தித்து பேசியிருக்கிறார் .
இது பற்றி தகவல் தெரிந்த டிடிவி தினகரன் அவரை தற்போது கட்சியில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதன் இறுதி கட்டமாக வருகிற சட்டமன்றத் தேர்தலில் தனக்கு செல்வாக்கு உள்ள முக்குலத்தோர் பகுதியில் போட்டியிடலாம் என சசிகலா முடிவு எடுத்திருக்கிறார் . அதேசமயம் தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து செயல்படவும் அவர் திரை மறைவில் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறார் .
இது தொடர்பாக ஒரு சில முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளை சந்தித்து பேச இருக்கிறார்கள் . முன்னதாக சசிகலாவை இணைத்துக் கொள்வது குறித்து பின்வாங்கிய நடிகர் விஜய் தற்பொழுது அவர் மூலமாக முக்குலத்தோர் ஓட்டுகள் கிடைக்கும் என்றும் தென் மாவட்டங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் கருதுகிறார் . எனவே காங்கிரஸ் கட்சி கூட்டணி சேரும் வகையில் சசிகலாவையும் கூட்டணியில் சேர்த்தால் அதிமுக ஓட்டு வங்கிகள் தனக்கு கிடைக்கும் என விஜய் தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது .
எனவே சசிகலாவின் புதிய கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் இணையுமானால் நான்காவது மிகப் பெரிய அணி ஒன்று உருவாகுவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டு இருக்கிறது . இன்னும் ஒரு சில தினங்களில் சசிகலா தனது புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது . இது மட்டுமல்லாமல் வேட்பாளர்கள் தேர்வுக்கும் அவர் தயாராகி வருகிறார் என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது ..
சசிகலா புதிய கட்சி தொடங்குவார் விரைவில் தேர்தல் களத்தில் போட்டியிடுவார் என ஜெம் தொலைக்காட்சி முன்னதாக செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

