
பா.ஜ.க.வில் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் வாருங்கள் டெல்லியில் திறந்த வெளியில் சனாதனம் குறித்து விவாதிப்போம் என்று தி.மு.க. சார்பில் நானும் பேசுகிறேன் என்று ஆ.ராசா எம்.பி. பேசினார்…
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அரியாங்குப்பம் தொகுதி வீராம்பட்டினத்தில் கருணாநிதியின் முழு உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் கருணாநிதி உருவச்சிலையைத் திறந்து வைத்தனர்.
விழாவில் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:- கருணாநிதி தனது அறிவால், ஆற்றலால், தியாகத்தால், உழைப்பால் தமிழக முதல்-அமைச்சராக இந்திய அரசியலுக்கு ஆற்றியுள்ள பங்கு ஏராளம். அவர் எத்தனை பிரதமர், குடியரசுத் தலைவர்களை உருவாக்கியுள்ளார். அகில இந்திய அரசியலில் எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம் கருணாநிதியின் பங்கு அதிகம்.
அமித்ஷாவுக்கு சவால் சனாதனம் என்றால் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நான் புதுச்சேரியிலிருந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு சவால் விடுகிறேன். அமித்ஷா, பா.ஜ.க.வில் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் வாருங்கள் டெல்லியில் திறந்த வெளியில் விவாதிப்போம். தி.மு.க. சார்பில் நானும் பேசுகிறேன்.
நாங்கள் சனாதனம் வேண்டாம் என்று போராடியதால் தான் தமிழிசை கவர்னர், வானதி சீனிவாசன் வக்கீல், அண்ணாமலை ஐ.பி.எஸ். அதிகாரியாக ஆனார்கள்.மோடியை விட அமித்ஷாவை விடப் பா.ஜ.க.வில் உள்ள அனைத்து அமைச்சர்களைவிட, ஆர்.எஸ்.எஸ். இருப்பவர்களைவிட வெள்ளையர்கள் நல்லவர்கள்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து நாட்டின் பிரதமர் இங்கு வருகை தந்து, எங்கள் அரசு உங்களுக்குப் பாவம் செய்துவிட்டது என்று கூறி மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். ஆனால் மனிப்பூரில் 200-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுவிட்டு பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளம்பெண்களை ஆடைகள் இல்லாமல் அழைத்துச் சென்றுகாட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளனர்.
இதனை நியாயப்படுத்தும் அங்குள்ள முதல்-அமைச்சரை நாடாளுமன்றத்தில் மோடி, அமித்ஷா பாராட்டுகின்றனர். ஊழலும், மதவாதமும் வளர்ந்து கொண்டிருக்கிற இந்த ஆட்சியைத் தூக்கி எரிவதற்கு நாம் எல்லோரும் உறுதியேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
