அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எனது வீட்டின் பாதுகாப்பிற்காகக் கட்டப்பட்டிருந்த மதில் சுவரை அரசு அதிகாரிகளை வைத்து இடித்துக் கொலை மிரட்டல் விடுகிறார்கள் எனக் கூறி – 77 வயது முதியவர் தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்குப் புகார் மனு அனுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் உள்ள வேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி.இவரது வயது 77. இவர் விவசாயம் செய்து வருகிறார். விவசாயி குப்புசாமி வீட்டின் பாதுகாப்பு மதில் சுவரை அத்துமீறி உள்ளூரை சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர், அரசியல் காரணமாக அரசியல் அதிகாரிகள் துணையுடன் ஜேசிபி வண்டியை வைத்துத் தனது வீட்டு மதில் சுவரை இடித்து விட்டதாகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்குப் புகார் மனு அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து விவசாயி ராமசாமி கூறும்போது “நாங்கள் இந்த வீட்டில் பரம்பரை பரம்பரையாகக் குடியிருந்து வருகிறோம், எங்கள் வீட்டின் எதிரில் யாருக்கும் எந்த விதமான தொந்தரவும் இல்லாத அளவில் எங்களுக்குச் சொந்தமான இடத்தில் பாதுகாப்பு மதில் சுவர் அமைத்திருந்தோம். திடீரென்று சமீபத்தில் இரவு நேரத்தில் எந்த விதமான முன்னறிவிப்புமின்றி அரசு அதிகாரிகள் எங்களது மதில் சுவரை ஜேசிபி வண்டியை வைத்து இடித்துத் தள்ளினார்கள்.
ஏன் இப்படி செய்கிறீர்கள்?இது அராஜகம் என்று நான் எவ்வளவோ கெஞ்சியபோது,, அருகில் இருந்த உள்ளூர் அரசியல்வாதிகள் கொலை மிரட்டல் விடுத்தார்கள். இது சம்பந்தமாக உடனடியாகத் தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தேன். என்னுடைய புகார் மனுவைக் காவல்துறையினர் வாங்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து நான் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் எனக்கு நியாயம் கேட்டுப் புகார் மனு கொடுத்துள்ளேன்.இதே போல் தமிழக முதல்வர் மற்றும் அரசுத் துறை அதிகாரிகளுக்கும் புகார் மனுவை அனுப்பி உள்ளேன்.என்னுடைய 77 வது தள்ளாத வயதில் இப்படி வேதனைப் படுத்துகிறார்கள்.எனக்குத் தக்க நடவடிக்கை எடுத்து, உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும்”என்று கோரிக்கை வைத்தார்.

