
இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில் சிtப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் இராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாகத் தில்லிக்கு வந்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில் அவருக்கு இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சிக்காக வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மைப் பிரதமர் நரேந்திர மோடி அழைத்து வந்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குடியரசுத் தலைவர் மாளிகையின் முற்றத்துக்கு வந்தார்.
அவரைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அழைத்துச் சென்றனர். அப்போது இருவருக்கும் கைகொடுத்துப் புடின் வாழ்த்துத் தெரிவித்தார்.
இராணுவ இசைக் குழுவின் இசை முழங்கப் புடினுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இராணுவ வீரர்கள் வரிசையாக அணிவகுத்து நின்று வரவேற்றனர்.
புடினை வரவேற்று அழைத்துச் சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மும், பிரதமர் நரேந்திர மோடியும் இந்திய குழுவினரை அவருக்கு அறிமுகப்படுத்தினர். அதேபோல் தன்னுடன் வந்துள்ள ரஷ்யக் குழுவினரை இருவருக்கும் புடின் அறிமுகப்படுத்தினார்.
குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரிடம் விடைபெற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அங்கிருந்து மகாத்மா காந்தி நினைவிடத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.
தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தி நினைவிடத்தில் உள்ள குறிப்பேட்டில் விளாடிமிர் புடின் கையொப்பமிட்டார். பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் தில்லி ஐதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
இரு நாடுகளிடையே வணிகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள உறவுகளையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் விரிவாகப் பேச்சு நடத்தினர்.



