விரைவில் ‘தனி ஒருவன் 2’.. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு.!

தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் ‘தனி ஒருவன் 2’ திரைப்படம் அடுத்த ஆண்டு தொடங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார். இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை ஏஜிஎஸ் நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தனி ஒருவன்’. இயக்குநர் மோகன் ராஜா இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக, இப்படத்தில் சித்தார்த் அபிமன்யு என்ற வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்திருந்த விதம் ரசிகர்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றது. விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடியான வசனங்கள் மற்றும் வித்தியாசமான கதைக்களம் எனப் பல அம்சங்களால் இப்படம் தமிழ் சினிமாவில் தனி இடத்தைப் பிடித்தது.

இதனைத் தொடர்ந்து, ‘தனி ஒருவன் 2’ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால், பல்வேறு காரணங்களால் படத்தின் தயாரிப்புப் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தொடர்ந்து இருந்து வந்தது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் மோகன் ராஜா, தனி ஒருவன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு தொடங்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். படத்தை எப்போது தொடங்குவது என்பது தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தின் முடிவைப் பொறுத்தே அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது நடிகர் கார்த்தியை வைத்து தனது அடுத்த திரைப்படத்தை இயக்கத் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், கார்த்தி நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த கூடுதல் தகவல்களை தற்போதே வெளியிடுவது முன்கூட்டியதாக இருக்கும் என்றும் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

இதனால், கார்த்தியுடன் புதிய கூட்டணி ஒருபுறம், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தனி ஒருவன் 2 மறுபுறம் என இயக்குநர் மோகன் ராஜாவின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *