வங்கதேசத்தில் அரசியல் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் முன்னாள் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸின் மூதாதையர் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் சிட்டகாங் (Chattogram) பகுதியில் அமைந்துள்ள முகமது யூனுஸின் மூதாதையர் வீட்டில், புதன்கிழமை நள்ளிரவுக்கு முன்பாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டின் தரைத்தளத்தில் பயன்பாட்டில் இல்லாத அறையில் தீப்பற்றியதைக் கண்ட போலீசார், உடனடியாகச் சென்று தீயை அணைத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழப்போ, காயங்களோ ஏற்படவில்லை என்றும், யூனுஸின் குடும்பத்தினர் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவைப்பு சம்பவமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், தடை செய்யப்பட்ட அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா, இந்தியாவில் இருந்து வரும் டிசம்பர் மாதம் வங்கதேசம் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஆட்சியை இழந்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற போராட்ட ஒடுக்குமுறை தொடர்பான வழக்கில், வங்கதேச நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
இந்தச் சூழலில், ஹசீனாவின் அவாமி லீக் கட்சி நாடு தழுவிய முடக்கப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள், வெடிகுண்டு வீச்சுகள், வாகனங்களுக்குத் தீ வைப்பு மற்றும் அரசியல் மோதல்கள் அதிகரித்துள்ளன.
மேலும், முகமது யூனுஸ் நிறுவிய கிராமீன் வங்கியின் கிளைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. கடந்த நவம்பர் 10 முதல் 17-ஆம் தேதி வரை மட்டும் 22 கிளைகள் தீவைப்பு மற்றும் சேதப்படுத்துதல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
இதனிடையே, வன்முறையைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஷேக் ஹசீனாவின் நாடு திரும்பும் திட்டம், அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மோதல் என வங்கதேசத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.



