
புதுச்சேரியில் பைனான்ஸியரிடம் உதவி கேட்பது போல் நடித்து, பணம்- நகைகளைக் கொள்ளையடித்து சென்ற ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த இருவரை முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதி, ( 44) முதலியார்பேட்டை, நுாறடிச் சாலையில் வாடகை வீட்டில் தங்கி, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 25ஆம் தேதி நள்ளிரவு, ஜோதி வீட்டின் அருகே காருடன் நின்றிருந்த 2 பேர், தாங்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டு மதுரை செல்ல வேண்டும் என்றும், இப்போது செல்ல முடியாததால் இரவு தங்குவதற்கு உதவி செய்யுமாறு ஜோதியிடம் கேட்டுள்ளனர்.
இதனை நம்பிய ஜோதி, தன்னுடைய வீட்டில் தங்கி கொண்டு காலையில் செல்லுங்கள் என அழைத்துச் சென்றார்.வீட்டின் மொட்டை மாடியில் படுத்தால் கொசு கடிக்கும் எனக் கூறி தனது வீட்டின் ஹாலில் இருவரையும் படுக்கச் சொல்லிவிட்டு, ஜோதி தனது அறைக்குச் சென்று படுத்தார்.
மறுநாள் காலையில் ஜோதி எழுந்து பார்த்தபோது, மேசையில் வைத்துவிட்டு சென்ற தனது 3 சவரன் தங்க நகை, ரூ. 50 ஆயிரம் பணம், ஸ்மார்ட் வாட்ச், மொபைல்போன் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஜோதி அளித்த புகாரின் பேரில், முதலியார் பேட்டை போலீசார் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த சபரி, சந்திரசேகர் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பணம், நகை மற்றும் காரைப் பறிமுதல் செய்தனர்.பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திக் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

