
அணைத்து அரசியல் கட்சி தலைவர்களாலும் ” தோழர் ” என்று அன்போடு போற்றப்படுபவர் தான் ஐயா நல்லகண்ணு..அவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் அவரின் அரசியல் எங்கிருந்து உருவானது , அவர் நாட்டுக்காக செய்த அர்ப்பணிப்புகள், சிறையும் போராட்டங்களும் நிறைந்த அவருடைய வாழ்க்கையின் முக்கிய தருணங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பின் மூலமாக விரிவாக பார்க்கலாம்…
அனைத்துக் கட்சியினராலும் தோழர் என அன்புடன் அழைக்கப்பட்டவர் தான் ஐயா நல்ல கண்ணு. இவர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்.. விடுதலைப் போராட்ட வீரர் ..மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் தலைவர் … சாதியத்திற்கு எதிரான போராளி..என பன்முகம் கொண்டவர். கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று , பின்னர் உடல்நலம் தேறிய நிலையில் மீண்டும் கவலைகிடமாக உள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது…
அவருடைய இத்தனை வருட அரசியல் காலத்திலேயே மிக முக்கியமான விசேஷம் என்ன தெரியுமா ?இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க நாளான 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி தான் தோழர் நல்ல கண்ணுவின் பிறந்த நாளாகும் அதாவது இந்த கம்யூனிஸ்ட் கட்சி எந்த நாளில் தொடங்கப்பட்டதோ அதே நாளில் பிறந்தவர் தான் நல்ல கண்ணு . இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோன்றிய நாளில் பிறந்த ஒரே தலைவர் நல்ல கண்ணு தான்
எல்லோராலும் தோழர் என்று அழைக்கப்படும் நல்ல கண்ணு , இந்தக் கால அரசியல்வாதி அல்ல அவர் பழங்கால அரசியல்வாதி. தனது நூறாண்டு கால வாழ்க்கையில் சொந்த செலவுக்காக கூட யாரிடமும் கையேந்தாதவர் . பத்து பைசா தனக்காக வேண்டுமென்று பணமும் சொத்தும் சேர்க்காதவர். கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளித்த போதும் கூட அந்த ரொக்க பணத்திலிருந்து ஒரு பைசா கூட தனக்கென எடுத்துக் கொள்ளாத மிகப்பெரிய தலைவர் அவர்..
அவரது வாழ்க்கை வரலாறு இன்னும் 100 ஆண்டுகளுக்கு பேசும் . காரணம் , அவர் நாட்டுக்காகவும் , நாட்டு மக்களுக்காகவும் செய்த அர்ப்பணிப்பு ஏராளம்…அவரின் இந்த தியாக வாழ்வு ஆவணமாக அகில இந்திய அரசியலில் எந்நாளும் நிலைத்திருக்கும் . தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் என்ற ஊரில் பிறந்தவர் நல்ல கண்ணு. அப்போது இது திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தது. இவரது தந்தை ராமசாமி , தாயார் கருப்பாயி இந்த தம்பதியருக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர்தான் நல்ல கண்ணு..
ஸ்ரீவைகுண்டம் என்பது பூலோக கைலாயம் என்றும் பூலோக வைகுண்டம் என்றும் பெயர் பெற்றது. பள்ளியில் படிக்கும் பொழுதே இவருக்கு நாட்டுப்பற்று தொற்றிக் கொண்டு விட்டது . மகாத்மா காந்தியை பார்த்து தான் இவர் தேசப்பற்று கொண்டவராக தனது வாழ்க்கையை தொடர்ந்தார்.. தனது 18 வது வயதில் , கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த இவர் , முதல் முதலாக
ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் 2000 மூட்டை நெல் களவாடப்பட்டதைக் கண்டறிந்து அதுபற்றி ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார்.
இதனை படித்த மாவட்ட ஆட்சியாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை மூட்டைகளையும் பறிமுதல் செய்தார். நல்ல கண்ணுவின் அரசியல் வாழ்க்கை இப்படித்தான் ஆரம்பித்தது.. இதனைத் தொடர்ந்து அவர் இனிமேல் மக்களுக்காக முழு நேரமும் உழைப்பேன் என்று முடிவெடுத்தார் . ஒரு கட்டத்தில் தனது தாய் தந்தையிடம் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதிக்கப்பட்ட போது, நெல்லை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். முறைப்படி நல்ல கண்ணுவுக்கு 14 ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது . ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி மேலிடமும் அப்போதைய தமிழக அரசும் கேட்டுக் கொண்டதின் பேரில் அவரது தண்டனை காலம் ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
நல்ல கண்ணு சிறையை விட்டு வெளியே வரும் பொழுது இந்திய நாடு சுதந்திரம் பெற்றிருந்தது .அவர் ஒரு புது உலகத்தை கண்டார் என்பது முக்கிய செய்தியாகும். புகழ்பெற்ற தாமிரபரணி ஆற்று மணலை, பலர் உயரிய பதவியை கையில் வைத்துக் கொண்டு மணல் அள்ளி காசு சம்பாதித்தார்கள் . இதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் நேரடியாக வாதாடி தாமிரபரணி மணலை காப்பாற்ற போராடி வெற்றி பெற்று தந்தவர் நல்ல கண்ணு .
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட நல்ல கண்ணு பலமுறை சிறை சென்று இருக்கிறார். இன்றைய அரசியல்வாதிகள் போல் பந்தா பகட்டு இல்லாத தூய்மையான அரசியல்வாதியாக திகழ்ந்தவர் நல்ல கண்ணு. பொதுமக்கள் நலனுக்காக இந்திய சுதந்திரப் போராட்டம் , விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம் , கனிம வள கொள்ளைக்கு எதிரான போராட்டம் என அவர் சந்தித்த போராட்டங்கள் ஏராளமானவை.
இதில் , எதையும் அவருடைய பப்ளிசிட்டிக்காக வெளியிட்டதில்லை .
யாரிடமும் அவர் கைநீட்டி பணம் பெற்றதில்லை அவரை பாராட்டி யாராவது பணம் கொடுத்தால் கூட அதை ஏழை எளியோர் அவர்கள் நலனுக்காக திரும்ப கொடுத்துவிடும் பழக்கம் கொண்டவர் .
25 ஆண்டு காலம் விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார் .13 ஆண்டு காலம் இந்திய பொதுவுடமை கட்சியின் தமிழ் மாநில செயலாளராக பணியாற்றினார் . தோழர் நல்ல கண்ணுவின் மனைவி ரஞ்சிதம் அம்மாள் , இவரும் ஸ்ரீ வைகுண்டத்தை சேர்ந்தவர்தான் . அந்த ஊரைச் சேர்ந்த அண்ணாசாமி தேவர் மற்றும் சந்தோஷி அம்மாள் தம்பதிகளின் மகள் தான் இவர் .
நல்ல கண்ணு மற்றும் ரஞ்சிதம் ஆகியோரின் திருமணம் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரான பா . மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது . இந்த தம்பதியருக்கு காசி பாரதி ,ஆண்டாள் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் . ஆண்டாள் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்கள், நல்ல கண்ணுவின் மனைவி ரஞ்சிதம் ஸ்ரீ வைகுண்டம் அருகில் உள்ள மணலி விளை ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்..
திருமதி ரஞ்சிதம் நல்ல கண்ணு 82 வயதாகிய நிலையில் சென்னையில் வசித்து வந்தார். அவரது முதுமை காரணமாகவும் உடல்நலக்குறைவு காரணமாகவும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோழர் நல்ல கண்ணுவின் நூறாவது பிறந்தநாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது .அப்பொழுது , முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என்று பேசினார் .. இது மட்டுமல்லாமல் நல்ல கண்ணுவின் 94 வது பிறந்த நாளன்று மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமலஹாசன் உங்கள் பெற்றோர் வைத்த பெயருக்கு தகுந்தார் போல நீங்களும் உங்கள் வாழ்நாளில் நல்ல கண்ணுவாக வாழ்ந்து இருக்கிறீர்கள் என்று வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது..
நல்ல கண்ணு கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தன்னுடைய வீட்டில் கால் தவறி கீழே விழுந்தார் அப்பொழுது அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது இதனை அடுத்து உடனடியாக சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
இதில் நல்ல கண்ணுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது தெரியவந்தது . உடனடியாக தலையில் தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது . அவருக்கு நூறு வயது ஆகிவிட்ட நிலையில் உடலில் பல பிரச்சனைகளும் இருந்த நிலையில் நரம்பியல் நிபுணர், இருதய நிபுணர் மற்றும் நுரையீரல் நிபுணர் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் என பல்வேறு மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு குழு மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது ..
இருந்தபோதிலும், நிலைமை மோசமானதால் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.. இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசியல் கட்சி தலைவர்களும் மிகவும் அவரை நினைத்து வேதனை அடைந்துள்ளனர்..
இதில் சிறப்பு தகவல் என்னவென்றால் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டார்.. மொத்த வாக்குகளின் 43.21% வாக்குகளை பெற்ற போதிலும் அவர் தோல்வி அடைந்தார். இவரை தோற்கடித்தவர் சி பி ராதாகிருஷ்ணன்… இவர் தான் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சி சார்பில் இந்திய துணை அதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது…
இந்த செய்தி தொகுப்பு மூலமாக ஐயா , நல்லகண்ணுவின் தனிப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் அரசியல் வாழ்வு குறித்து முழுமையாக தெரிந்து கொண்டோம் அல்லவா..மேலும் , இவரை போல இனி நம் தமிழ் நாட்டிற்கு தலைவர்கள் கிடைப்பார்களா என்பதெல்லாம் கேள்வி குறிதான்….


