
நாடு முழுக்க குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றி வைத்தனர்.
இதோடு, ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் சிறப்பு அணிவகுப்பு, கலை மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த வரிசையில், டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி வைத்தார்.
இதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர்களிலிருந்து பூக்கள் தூவப்பட்டன.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து முப்படையை சேர்ந்தவர்களின் சிறப்புச் சாகசங்கள், 16 மாநிலங்களின் சிறப்பு அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு உள்ளிட்டவை நடைபெற்றன.
இதுதவிர, நாட்டின் ராணுவ வலிமையை எடுத்துரைக்கும் வகையில் பீரங்கிகள், ஏவுகணைகள் வைக்கப்பட்டன. மேலும் போர் விமானங்களின் சாகசம் நிகழ்ச்சியில் பார்வையாளர்களைக் கவர்ந்தது.
சாகசம் மற்றும் கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகள் துவங்கும் முன்பே மாணவ, மாணவிகள் அணிவகுப்பு, முப்படையினர் அணிவகுப்பு பார்வையாளர்களிடமிருந்து கைத்தட்டல்களை பெற்றது.
சுமார் 90 நிமிடங்கள்வரை நடந்த குடியரசு தின நிகழ்ச்சியைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ கண்டுகளித்தார்.
டெல்லி கர்தவ்ய பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அரசியல் தலைவர்கள், அரசுத் துறை அதிகாரிகள், பொது மக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் எனச் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

