
ஆம்புலன்ஸ் வரத் தாமதம் ஏற்பட்டதால் இளைஞர் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனை முன்பு 100க்கு மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்கால் அடுத்த திருப்பட்டினம் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்று இளைஞர் இன்று வீட்டில் இருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். இதனை அடுத்து அவரை சிகிச்சைக்காகத் திருப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் வரத் தாமதம் ஏற்பட்டதால் டாட்டா ஏசி மூலம் கொண்டு சென்றனர்.
அங்கிருந்த மருத்துவர்கள்மேல் சிகிச்சைக்குக் காரைக்கால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இதனை அடுத்து அவரைக் காரைக்கால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு தாயாரானபோது ஆம்புலன்ஸ் வர அரை மணி நேரத்திற்கு மேலாகத் தாமதமானதாலும், மேலும் ஆம்புலன்ஸில் போதிய முதலுதவி சிகிச்சை கருவிகள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் வரும் வழியில் இளைஞர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் ஆம்புலன்ஸ் வரத் தாமதம் ஏற்பட்டதால் இளைஞர் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனை முன்பு 100க்கு மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



