
குடும்ப அட்டைதாரர்களுக்கு இம்மாதம் விநியோகிப்பதற்காக 20,000 மெட்ரிக் டன் துவரம் கருப்பு, 2 கோடி பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டு கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசுத் தகவல் தெரிவித்துள்ளது.
நியாய விலைக்கடைகளில் தமிழ்நாடு அரசால் எண்ணெய், பருப்புகள் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் இந்தப் பருப்பு, எண்ணெய் இந்த மாதம் வழங்கப்படவில்லையெனப் பொதுமக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்குரிய பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதியெனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் சிறப்புப் பொது விநியோகத் திட்டப் பொருட்களான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் கடந்த 14.04.2007 முதல் ஒவ்வொரு மாதமும் திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலம் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக் கடைகள்மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மே 2024 மாதத்திற்குரிய தேவையான 20,000 மெ.டன் துவரம் பருப்பு / கனடா மஞ்சள் பருப்பு மற்றும் 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளுக்குரிய இ-ஒப்பந்தப்புள்ளி இந்திய தேர்தல் ஆணைய 18.04.2024 தேதிய ஒப்புதலின்படி 20.04.2024 அன்று கோரப்பட்டு 02.05.2024 அன்று ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 04.05.2024 அன்று விலைப்புள்ளி திறக்கப்பட்டது.
இதில் குறைந்த விலைப்புள்ளி அளித்திருந்த பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந்ததாரர்களுடன் விலைக்குறைப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. விலைக்குறைப்புபேச்சுவார்த்தையில் நியாயமான விலை கிடைக்கப்பெற்றதால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குழுமத்தின் ஒப்புதலின்படி துவரம் பருப்பு விநியோகிப்பாளர்கள் நால்வருக்கும், பாமாயில் விநியோகிப்பாளர்கள் மூவருக்கும் கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டு நாளது தேதிவரை நடப்பு மே மாதத்திற்கு விநியோகிப்பதற்காக நியாய விலைக் கடைகளுக்கு 5,405 மெ.டன் துவரம் பருப்பு மற்றும் 31,19,722 பாமாயில் பாக்கெட்டுகள் நகர்வு செய்யப்பட்டுள்ளன.
ஆகவே, அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே 2024 மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.



