Ramadoss:மழை நீர் தேங்காமல் தடுப்பதில் தமிழக அரசுத் தோல்வி…சொல்கிறார் ராமதாஸ்!

Advertisements

சென்னை: ” மழை நீர் தேங்காமல் தடுப்பதில் சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் தோல்வியடைந்து விட்டன” , என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை அகற்றும் பணியில் தமிழக அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

இந்நிலையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னையில் வெள்ள நீரை அகற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: அடுத்து வரும் மழைகளில் தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை வேண்டும்! சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு குறிப்பிடும்படியாக மழை பெய்யாததாலும், மாநகராட்சி சார்பில் மழை நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதாலும் சென்னை முக்கிய சாலைகளில் நேற்று பகலில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்திருக்கிறது. அதனால் போக்குவரத்து ஒருபுறம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், பொதுமக்களும் நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர்.

அதேநேரத்தில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் உட்புறச்சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தேங்கியுள்ள மழை நீர் இன்னும் வெளியேற்றப்படவில்லை. அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தி அந்தப் பகுதிகளிலும் இயல்பு நிலையைத் திரும்பச் செய்வதற்கு சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சென்னையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததையும், அதிக எண்ணிக்கையிலான நீர் இறைப்பான்கள் கொண்டு வரப்பட்டு தேங்கிக் கிடந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டதையும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் மழை நீர் தேங்காமல் தடுப்பதில் சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் தோல்வியடைந்து விட்டன.

திருப்புகழ் குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தவாறு மழை நீர் வடிகால்கள் முழுமையாக அமைக்கப்பட்டிருந்தால் சென்னையில் எந்தப் பகுதியிலும் மழை நீர் தேங்காமல் தடுத்திருக்க முடியும். சென்னையில் இந்த முறை எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே மழை பெய்திருக்கிறது. இன்னும் இரு மாதங்கள் நீடிக்கக்கூடிய வடகிழக்கு பருவமழைக் காலத்தில் எதிர்பார்ப்பைவிட அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அத்தகைய சூழல் ஏற்பட்டால் அதைச் சமாளிக்கும் வகையில் சென்னையில் இன்னும் முடிக்கப்படாத மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகளைத் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு முடிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *