
சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் இன்று வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது…
புதுடெல்லி: சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை ரக்ஷா பந்தன். ரக்ஷா பந்தன் என்றால் பாதுகாப்பு பந்தம் என்பது பொருள். இந்த நாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனித கயிறு கட்டுவர்.
தீயவற்றிலிருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வுக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் சகோதரிகள் பிரார்த்தனை செய்து புனித கயிறு கட்டுவது வழக்கம்.
இந்நாளில், பெண்கள் புதிய ஆடைகள் அணிந்து, தமது சகோதரர்களின் மணிக்கட்டில் ராக்கி கட்டும் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பார்கள். சகோதரர்களின் நெற்றியில் சிகப்பு குங்குமம் வைத்து, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கிப் பின்பு மணிக்கட்டில் ராக்கி என்னும் புனிதக் கயிற்றைக் கட்டுவர்.
பதிலுக்குச் சகோதரர்கள், தங்கள் அன்பை தெரிவிக்கும் விதமாகச் சகோதரர்கள், சகோதரிகளுக்குப் பரிசுப்பொருட்களை வழங்குவார்கள்.
ஜம்மு காஷ்மீரில் ரக்ஷா பந்தன்விழா, பாதுகாப்புப் படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இதற்காக ‘Thanks Jawan’ என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஏராளாமன இஸ்லாமிய பெண்கள், தாங்களாகவே ராக்கி கயிறுகளைத் தயாரித்து ராணுவ வீரர்களின் மணிக்கட்டில் அணிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியான சம்பா செக்டரில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு ஏராளமான பள்ளிச் சிறுமிகள், ஆரத்தி எடுத்து, நெற்றித் திலகம் இட்டு, இனிப்பு ஊட்டி, ராக்கி கயிறு அணிவித்து தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.
இதேபோல், சத்தீஸ்கர் தலைநகர் ராஞ்சியில் உள்ள துணை ராணுவப் படை வீரர்கள் முகாமுக்குச் சென்ற ஏராளமான பள்ளி மாணவிகளும், பெண்களும் வீரர்களுக்கு ஆரத்தி எடுத்து, நெற்றித் திலகம் இட்டு, இனிப்பு ஊட்டி, ராக்கி கயிறுகளைக் கட்டினர். பின்னர் அவர்களோடு இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
ரக்ஷா பந்தனை முன்னிட்டு மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜெயினில் உள்ள மகாகாலேஸ்வரர் ஆலயத்திற்கு அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.
அங்குச் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, ஏராளமான இனிப்பு வகைகள் படையலிடப்பட்டன. ரக்ஷா பந்தனை முன்னிட்டு புத்தாடைகளை வாங்கவும், இனிப்புகளை வாங்கவும், ராக்கி கயிறுகளை வாங்கவும் நேற்றிவு பெரும்பாலான நகரங்களின் கடைத்தெருக்களில் மக்கள் குவிந்தனர்.



