Rahul Gandhi:நீட் பிரச்சினையில் பிரதமர் மோடி வழக்கம்போல் மவுனம் சாதிக்கிறார்!

புதுடெல்லி: நீட் விவகாரத்தில் பிரதமர் மோடி வழக்கம்போல் மவுனம் சாதிப்பதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த ஆண்டு நடத்தப்பட்ட இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிந்ததை எதிர்த்தும், முறைகேடுகள் நடந்ததை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “நீட் நுழைவுத் தேர்வில் 0.001% அலட்சியம்கூட இருக்கக் கூடாது. அது போன்ற அலட்சியம் இருப்பதாகத் தெரியவந்தால் அதனை உடனடியாகச் சரி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தனர். மேலும், வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையும், மத்திய அரசும் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 8ம் தேதிக்க ஒத்திவைத்தனர்.

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாகத் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “நீட் தேர்வு ஊழலால் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி வழக்கம்போல் மவுனம் சாதிக்கிறார். பிஹார், குஜராத், ஹரியாணா மாநிலங்களில் நடந்துள்ள கைதுகள், நீட் தேர்வு செயல்பாட்டில் திட்டமிட்ட ஊழல் நடந்துள்ளதைத் தெளிவாகக் காட்டுகிறது. பாஜக ஆளும் இந்த மாநிலங்கள்தான் வினாத்தாள் கசிவின் மையமாக மாறியுள்ளன.

வினாத்தாள் கசிவதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்படும் என்றும் அதன் மூலம் இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்றும் நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளித்துள்ளோம். எதிர்க்கட்சி என்ற வகையில் எங்களது பொறுப்பை நிறைவேற்றி, நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் குரல்களைத் தெருக்களிலிருந்து நாடாளுமன்றம் வரை வலுவாக எழுப்பவும், வினாத்தாள் கசிவதைத் தடுக்க கடுமையான சட்டங்களை உருவாக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *