Rahul Gandhi: முன்னாள் சகாக்களை மறைமுகமாகச் சாடிய ராகுல் காந்தி!

Advertisements

அதிகாரத்தை எதிர்த்து மோத முடியாமல் முன்னாள் சகாக்கள் தங்களிடம் கண்ணீர்விட்டு கதறி அழுததாக மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி எம்.பி பேசி உள்ளார்.

பாரத் ஜோடோ நீதி யாத்திரை’ என்ற பெயரில் நாட்டின் வடகிழக்கு பகுதியான மணிப்பூர் முதல் வடமேற்கு பகுதியான மகாராஷ்டிர தலைநகர் மும்பை வரை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி இந்தச் சுற்றுப்பயணம் தொடங்கிய நிலையில் மார்ச் 17ஆம் தேதி நிறைவடைந்தது.

அந்த வகையில், பாஜக ஆளும் மகாராஷ்டிராவின் பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர். அந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி தனது முன்னாள் சகாக்கள்குறித்த தகவல்களையும் வெளியில் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் எம்பியுமான அசோக் சவான் குறித்து அவரின் பெயரைக் குறிப்பிடாமலேயே ராகுல் காந்தி பேசினார்.

அதில் பேசிய ராகுல் காந்தி,”நாம் இப்போது அதிகாரத்துடன் போட்டியிட்டு வருகிறோம். இப்போது இந்தக் கேள்வி எழுகிறது. என்ன இந்த அதிகாரம்…? இந்த ராஜாவின் மனது அனைத்தும் தேர்தல் வாக்கு இயந்திரம், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரி ஆகியவற்றை சுற்றிய இருக்கிறது.

நான் யாரின் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், இந்த மாநிலத்தைச் சேர்ந்த மூத்த வீரர் ஒருவர், காங்கிரஸில் இருந்து பிரிந்தார். அவர் அழுதபடியே எனது அம்மாவிடம் கூறினார்,’சோனியாஜி, சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கிறது. இந்தப் படை பலம், ஆள் பலம் கொண்டவர்களுடன் என்னால் மோத முடியவில்லை, ஜெயிலுக்கு போக என்னால் முடியாது” என அவர் கூறினார்.

மகாராஷ்டிரா காங்கிரஸை சேர்ந்த சவான் கடந்த மாதம் பாஜகவில் இணைந்த நிலையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தற்போது நீக்கப்பட்டன. மிலிந்த் தியோரோவை அடுத்து அசோக் சவானும் பாஜகவில் இணைந்தது மகாராஷ்டிரா காங்கிரஸ் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படேலுக்கு அசோக் சவானுக்கும் கருத்து முரண்பாடு இருந்துள்ளது. இதற்கு ஆதார்ஷ் ஊழல் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. அசோக் சவான் மீது மூன்று வழக்குகள் உள்ளன. இதில் இரண்டு வழக்குகள் ஆதார்ஷ் கூட்டுறவு ஹவுசிங் சொசைட்டி சார்ந்ததாகும்.

ஸ்டாலின் பேச்சு:

இந்தக் கூட்டத்தில்கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது,”தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இனி பாஜகவை வீழ்த்துவது ஒன்றே நமது இலக்கு. பாஜகவை விடப் பெரிய ஆபத்து இந்தியாவுக்கு வேறு இல்லை. அவர்களிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்ற நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நியாயப் பயணத்தின் உண்மையான வெற்றி என்பது பாஜகவை வீழ்த்துவதில்தான் அடங்கியிருக்கிறது. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம் டெல்லியைக் கைப்பற்றி, அனைத்துத் தரப்பினருக்குமான, மதச்சார்பற்ற, உண்மையான கூட்டாட்சி அரசை அமைப்பதில் நிறைவுற வேண்டும்” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *