Pushpa 2:புஷ்பா 1-ல் சமந்தா, புஷ்பா 2-ல் திரிப்தி டிம்ரியா?

Advertisements

புஷ்பா 2-ல் நடிகை திரிப்தி டிம்ரி சிறப்பு தோற்றத்தில் பாடல் ஒன்றிற்கு நடனமாட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை:அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இந்தப் படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ.400 கோடிவரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதேசமயம், இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடம் பெரிதும் கவனம் பெற்றன.

இந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ‘புஷ்பா 2 தி ரூல்’ என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் ‘புஷ்பா புஷ்பா’ என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலானது. தற்போது படத்தின் இரண்டாவது பாடலான ‘சூசெகி’ வருகிற 29-ந்தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகை திரிப்தி டிம்ரி சிறப்பு தோற்றத்தில் பாடல் ஒன்றிற்கு நடனமாட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ‘புஷ்பா’ படத்தின் முதல் பாகத்தில் ‘ஊ சொல்றியா’ பாடலுக்காகச் சமந்தா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இப்போது, இரண்டாம் பாகத்தில் திரிப்தி டிம்ரி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *