
ரூ. 3 கோடி மதிப்புள்ள தமது அக்கா வீட்டைத் திமுக முன்னாள் எம்.பி. சி.பி. திருநாவுக்கரசு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முன்னிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அவர்களைச் சந்தித்து வீட்டின் பத்திரம், சாவியை ஒப்படைத்தனர்.
புதுச்சேரி மாநில திமுக முன்னாள் எம்.பி., யும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சி.பி. திருநாவுக்கரசு அவர்களின் உடன் பிறந்த சகோதரி தில்லி என்கிற சரோஜினி என்பவர் தமது கணவர் சுப்ரமணி என்பவருடன் புதுச்சேரி சாரதி நகர் 2–வது குறுக்குத் தெரு, எண்–6 என்ற முகவரியில் சொந்த வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் தில்லி என்கிற சரோஜினி என்பவர் ஜனவரி 14–ஆம் தேதியும், அவரது கணவர் சுப்ரமணி 10 நாள் கழித்து ஜனவரி 24–ஆம் தேதியும் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தனர்.இதனிடையே சாரதி நகரில் அவர்கள் வசித்து வந்த வீட்டை அவர்கள் மறைவிற்கு பிறகு அரசு நூலகம் அமைக்க வேண்டும் என்று 1970–ஆம் ஆண்டு உயில் சாசனம் எழுதி வைத்திருந்தனர்.
அதனடிப்படையில் ரூ. 3 கோடி மதிப்புள்ள தமது அக்கா வீட்டைத் திமுக முன்னாள் எம்.பி. சி.பி. திருநாவுக்கரசு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முன்னிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அவர்களைச் சந்தித்து வீட்டின் பத்திரம், சாவியை ஒப்படைத்தனர்.இந்தச் சந்திப்பின்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், தொகுதி செயலாளர் சக்திவேல், வழக்கறிஞர் ரமேஷ், கிளைச் செயலாளர் அகிலன் ஆகியோர் உடனிருந்தனர்.

