தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை தரம் தாழ்ந்து பேசி விமர்சனம் செய்த தமிழக அமைச்சர் அன்பரசனை கண்டித்து புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக் கழக செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது தமிழக அமைச்சர் அன்பரசனின் திருவுருவப்படத்தை கிழித்து எறிந்தும், தீயிட்டு கொளுத்தியும், அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி அவருக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளரிடம் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது,
மனித தெய்வங்களாகக் கழகப் பொதுச்செயலாளராக வணங்கப்படும், மக்களால் எக்காலத்திலும் போற்றப்படும் ஒப்பற்ற தலைவர்களான புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் பற்றித் தொண்டர்கள் மனம் நோகும் அளவில் கேலி செய்து அவதூராகப் பேசிய தமிழக திமுக அமைச்சர் திரு.அன்பரசன் அவர்களைப் புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மறைந்த தலைவர்களைப் பற்றிப் பிறர் மனம் நோகும் வண்ணம் பேசுவது அவர்களின் வக்கிர புத்தியின் செயலை வெளிப்படுத்துவதாகும். அரசியல் கட்சியைத் தற்போது துவக்கியுள்ள விஜய் பற்றி விமர்சனம் செய்வதாக இருந்தால் நேரடியாக அவரைப் பற்றிப் பேசுவது நல்ல அரசியல்வாதிக்கு அழகாகும். அதை விட்டுவிட்டு ஒட்டுமொத்த தமிழ் சமுதாய மக்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்த எங்கள் புரட்சித்தலைவி அம்மாபற்றிக் கேவலப்படுத்தி பேசுவதும், அப்படி பேசிய ஜந்து தங்களை மெச்சிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அங்குள்ள திமுகவினர் கைதட்டி சிரிப்பது இவை எல்லாம் தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு ஏற்புடையதா? சினிமா நடிகர்களைத் தரம்தாழ்ந்து தற்போது பேசும் திமுகவினர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் கமலஹாசனை தங்களது பொய் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்திகொண்டது ஏன்.
இப்படிப்பட்ட தரம் தாழ்ந்து பேசுவது தான் அவர்கள் அமைச்சர்களாக நீடிப்பதற்கான அளவுகோலாகத் திரு.ஸ்டாலின் வைத்துள்ளாரா? திமுக அமைச்சரின் இது போன்ற கேடுகெட்ட வார்த்தை ஜாலங்களை வாய்மூடி மௌனமாகத் தமிழகம் முதல்வர் இருப்பது ஒரு மாநில முதல்வருக்கு அழகல்ல.
மறைந்த தலைவர்களைப் பற்றி அனாகரிகமாகப் பேசிய திரு.அன்பரசனை அமைச்சர் பதவியிலிருந்து தமிழக முதல்வர் நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் முடியவில்லை என்றால் அமைச்சரின் அருவருக்கத் தக்க பேச்சின் செயலுக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

