
போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை மாலை நாடு முழுவதும் மாவட்ட அளவில் மெழுகுவர்த்தி பேரணி நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இந்தியாவையே உலுக்கி வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் ஜூன் மாதம் 20-ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், டெல்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு கிளப் வளாகத்தில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகளுடன், மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர், சுமார் 2 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தநிலையில், நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாளை மாலை நாடு முழுவதும் மாவட்ட அளவில் மெழுகுவர்த்தி பேரணி நடத்தக் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.



