
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே உள்ள பஞ்சரக் கொல்லி பகுதியைச் சேர்ந்த வனக்காவலர் அச்சப்பன் என்பவரின் மனைவி ராதா கடந்த 24-ந்தேதி காபி பறித்துக் கொண்டிருந்தபோது புலி தாக்கிக் கொல்லப்பட்டார்.
அந்தப் புலியைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வனக்குழுவை சேர்ந்த ஜெயசூர்யாவும் புலியின் தாக்குதலுக்கு உள்ளானார். இதையடுத்து அந்தப் புலி ஆட்கொல்லி புலி என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அந்தப் புலியைச் சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தநிலையில் பெண்ணைக் கொன்ற ஆட்கொல்லி புலி, பிலாக் காவு அருகே உள்ள வனப்பகுதியில் இறந்து கிடந்தது. 7 வயது பெண் புலியான அது எப்படி இறந்தது? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் புலி தாக்கி இறந்த ராதாவின் குடும்பத்தினரை சந்திக்க வயநாடு தொகுதி எம்.பி.யான பிரியங்கா காந்தி இன்று வயநாடு வருகிறார். டெல்லியிலிருந்து விமானம் மூலமாகக் கேரளா கண்ணூர் சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று மதியம் வருகிறார்.
பின்பு சாலை மார்க்கமாக மானந்தவாடிக்கு செல்கிறார். அங்கு அவர் புலி தாக்கிப் பலியான ராதாவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
பின்பு கல்பெட்டாவில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மதியம் நடக்கும் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்திலும் பிரியங்கா காந்தி பங்கேற்கிறார்.
அதன்பிறகு மேப்பாடியில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பிரியங்காகாந்தி பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு விமான நிலையத்துக்கு வந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
