கடற்படை வீரர்களின் அணிவகுப்பு.. மரியாதை ஏற்ற குடியரசுத் தலைவர்..!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் எழிமலையில் அமைந்துள்ள இந்தியக் கடற்படை அகாடமியில் பயிற்சி நிறைவு செய்த வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்..

இந்தியக் கடற்படையில் இணைவதற்காக இளம் வீரர்களுக்கு எழிமலையில் உள்ள கடற்படை அகாடமியில் பல்வேறு கட்டங்களாகப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் கடற்படை சார்ந்த தொழில்நுட்பப் பயிற்சிகள், உடல் தகுதி, தலைமைப் பண்பு மற்றும் ஒழுக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியக் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த பயிற்சி வீரர்கள் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்றனர். மொத்தம் 400-க்கும் மேற்பட்ட பயிற்சி அதிகாரிகள் அணிவகுப்பில் கலந்துகொண்டனர். இதில் பெண் வீரர்களின் பங்கேற்பும் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.

சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கிப் பாராட்டினார். மேலும், கடல் வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பு என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடனும், அன்றாட மக்களின் வாழ்க்கையுடனும் நெருங்கிய தொடர்புடையது எனத் திரௌபதி முர்மு தெரிவித்தார். கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் பாதிப்புகள் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தையும், அதன் விலையையும் பாதிக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த வீரர்கள், இனி நாட்டின் கடல்சார் பாதுகாப்புப் பணிகளில் முக்கியப் பொறுப்புகளை ஏற்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *