
பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக தேர்வு ஒத்திவைப்பு!
கனமழை காரணமாக தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை மற்றும் கறம்பக்குடி ஆகிய இரண்டு தாலுக்காக்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் அந்த வட்டத்திற்குள்ளான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மற்றும் பிற்பகல் என இரண்டு வேளைகளிலும் பல்வேறு பாடப்பிரிவுகளில் தேர்வுகள் நடைபெற இருந்தன. பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதோடு, இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டே தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான மாற்று தேதிகள் dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

