Pongal Festival 2024: இன்று முதல் பொங்கல் சிறப்புச் சந்தை!

Advertisements

அண்ணாநகர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் அங்காடி நிர்வாகச் சார்பில், இன்று  முதல் வருகின்ற 17ம் தேதிவரை சிறப்புச் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு மற்றும் மஞ்சள், இஞ்சி கொத்து ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல் சிறப்பு சந்தையில் பொருட்களை வாங்க அதிக கூட்டம் ஏற்படும் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதாலும் போக்குவரத்து சீர்செய்வதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதற்காக நேற்று முன்தினம்  அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி, கோயம்பேடு காவல் நிலைய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தினகரன், சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சசிராஜன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். இதில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் வகையிலும் பொருட்கள் வாங்க வருகின்ற பொதுமக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் போக்குவரத்து மற்றும் சட்டம்- ஒழுங்கு போலீசார் 250 பேர் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று  முதல் கோயம்பேடு சிறப்புச் சந்தை செயல்பட உள்ளதால் அந்த இடத்தை அங்காடி நிர்வாகஅலுவலர் இந்துமதி ஆய்வு செய்து சிறப்புச் சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். இன்று  முதல் வரும் 17ம் தேதிவரை சிறப்புச் சந்தை செயல்படும் நிலையில் நேற்று  காலையிலிருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விழுப்புரம், கடலூர் சேலம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளிலிருந்து கரும்பு, மஞ்சள் குலைகள், இஞ்சி கொத்து ஆகியவற்றை விற்பனைக்குக் கொண்டுவந்தனர்.

இதனால் தற்போதே பொங்கல் விற்பனை களைகட்ட துவங்கிவிட்டது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். அங்காடி நிர்வாகம் கூறும்போது, ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தையின்போது வியாபாரிகள் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக வியாபாரம் செய்யக் கூடாது. அங்காடி நிர்வாகம் கொடுத்த பகுதியில் வியாபாரம் செய்ய வேண்டும். சிறப்புச் சந்தைக்கு வியாபாரிகள் அங்காடி நிர்வாகக் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *