Pongal Festival 2024: 50 ஆயிரம் பேர் முன்பதிவு!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல இதுவரை 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய விரைவு பேருந்துகளில் அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன.

தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானதும் முதன்மையானதும் பொங்கல் பண்டிகை என்பது அனைவருக்கும் தெரியும். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 14-ம் தேதி போகி பண்டிகை தொடங்கி,15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப்பொங்கல், 17-ந் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட, ஆண்டுதோறும் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் செல்வது வழக்கம். இதனால் மக்கள் முன் கூட்டியே முன்பதிவு செய்வது வழக்கம். அப்படியாக முன்பதிவு செய்ய 50 ஆயிரம் பேர் பதிவு செய்து முடித்துள்ளதால் தென்தமிழகத்திற்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் முன்பதிவு நிரம்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு மிக விரைவாக  நடைபெறுகிறது. பேருந்து மட்டுமல்லாது ரயில் டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டு  நிரம்பிவிட்டது. இதனால் வழக்கமாக செல்லும் ரயில், சிறப்பு ரயில் அனைத்தும் நிரம்பி விட்ட நிலையில் ஆம்னி பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.

குறிப்பாக 12, 13, 14 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்கு பஸ், ரயில்களில் இடமில்லை. பொங்கல் பண்டிகை சனி, ஞாயிறு (13, 14-ந்தேதி) விடுமுறை நாட்களோடு சேர்ந்து 15-ந்தேதியும், அதனை தொடர்ந்து மாட்டு பொங்கல், உழவர் தினம், 16, 17-ந்தேதி அரசு விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை உள்ளதால் இந்த 5 நாட்களும் நிரம்பியுள்ளதாக போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும்  சென்னையில் இருந்து வெளியூர் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து 3 நாட்களுக்கு அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 50 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 35 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *