
டேராடூன்:
38-வது தேசிய விளையாட்டுப் போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பிப்ரவரி 14-ந் தேதிவரை நடக்கிறது.
டேராடூன், ஹரித்வார், நைனிடால், ஹல்த்வானி, ருத்ராபூர், ஷிவ்புரி, நியூதெக்ரி ஆகிய 7 நகரங்களில் 18 நாட்கள் அரங்கேறும் இந்தப் போட்டியில் 38 அணிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இதில் தடகளம், நீச்சல், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பேட்மிண்டன், ஆக்கி, குத்துச்சண்டை, பளுதூக்குதல், கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கபடி, கோ-கோ உள்பட 32 வகையான போட்டிகள் இடம் பெறுகிறது.
களரிப்பட்டு, யோகாசனம், மல்லர்கம்பம், ரேப்டிங் ஆகியவை காட்சி போட்டியாக நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் 393 வீரர், வீராங்கனைகளை கொண்ட தமிழக அணி 31 விளையாட்டுகளில் களம் காணுகிறது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கம் வென்ற வீராங்கனை மனு பாக்கர், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆகியோர் இந்தப் போட்டியைத் தவறவிடுபவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெறும் கோலாகல தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைக்கிறார். போட்டியைத் தூர்தர்ஷன் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
கடந்த தேசிய விளையாட்டு 2023-ம் ஆண்டு கோவாவில் 5 நகரங்களில் நடந்தது. இதில் மராட்டியம் 82 தங்கம் உள்பட 230 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
