S.Ve.Shekher: வெட்கமே இல்லாமல் பொய் சொல்ல அண்ணாமலையால் மட்டுமே முடியும்!

Advertisements

வெட்கமே இல்லாமல் பொய் சொல்ல அண்ணாமலையால் மட்டுமே முடியும் என நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதிவரை இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து இடங்களையும் கைப்பற்றிச் சாதனைப் படைத்தது. அதேசமயம் எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்தனர். ஆனால் கடந்த தேர்தலைக் காட்டிலும் தங்களுடைய வாக்கு வங்கி சதவிகிதம் உயர்ந்திருப்பதாகத் தோல்விக்குப் பின்னர் அரசியல் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இதனிடையே நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் அண்ணாமலை மற்றும் பாஜக தோல்விகுறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில், “தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பாஜக தோல்விக்கு அண்ணாமலை தான் காரணம் என்பது 100 சதவிகிதம் உண்மையான விஷயம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அவர் கட்சியைக் காவல் நிலையம்போல நடத்துகிறார். பாஜகவில் இணைந்ததும் என்னிடம் வந்து ஆசீர்வாதம் வாங்கினார். இன்னைக்கு என்னைத் தெரியவில்லையெனச் சொல்கிறார். சிலருக்கு சில நேரம் அதிர்ச்சியில் அம்னீசியா வந்து விடும். கொஞ்சம் தெளிய விட வேண்டும். எனவே அவரை ஊடகம் தொந்தரவு செய்ய வேண்டாம். சிலருக்கு மைக்கை கண்டால் உளறல் ஆரம்பித்து விடும். அந்த மாதிரித் தம்பி அண்ணாமலை கொஞ்சம் உடல் நலத்தை பார்ப்பது நல்லது.

அண்ணாமலை என்னைத் தெரியாது எனச் சொன்னார். ஆனால் மோடியை போய்க் கேட்டுப் பாருங்கள். எஸ்.வி.சேகர் யாருன்னு சொல்லுவார். இன்னும் கொஞ்ச நாள் போனால் மோடிக்கு அண்ணாமலை யாரென்றால் தெரியாமல் போய் விடும். தமிழ்நாட்டில் பாஜக தோற்றாலும் வாக்கு வங்கி சதவிகிதம் உயர்ந்ததாகச் சொல்கிறார்கள். இது முட்டாள் தனமானது. ஒரு ஓட்டில் தோற்றாலும் தோற்றது தான். பாஜக தமிழ்நாட்டில் வாஷ் அவுட் ஆகி விட்டது என்பது தான் உண்மை. 21 தொகுதியில் மட்டுமே நின்றிருக்கிறார்கள். பாஜக பெற்ற ஓட்டுகள் கூட்டணியில் இருந்த தமாகா, புதிய நீதிக்கட்சி, அமமுக, பாமகவின் ஓட்டுகளும் சேர்த்து தான். வெட்கமே இல்லாமல் போய்ச் சொல்ல வேண்டும் என்றால் அது அண்ணாமலையால் மட்டும் தான் முடியும்” என எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *