PM Modi in Thoothukudi: மத்திய அரசுத் திட்டங்கள் மறைக்கபடுகின்றன.. மோடி கடும் தாக்கு!

தூத்துக்குடியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் நாடு முழுவதுக்கும் வளர்ச்சிக்கான ஊக்க சக்தி இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தத் திட்டங்கள் ஒரே பாரதம் உன்னதர பாரதம் என்ற கருத்தைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளது எனக் குறிப்பிட்டார்.

தூத்துக்குடி: பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவில் அவர் மதுரையில் தங்கினார்.

இன்று காலை 8.40 மணிக்கு மதுரை விமான நிலையத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடிக்கு புறப்பட்டார். பிரதமர் மோடி காலை 9.30 மணிக்குத் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஹெலிபேடில் வந்து இறங்கினார். அதனைத் தொடர்ந்து நாட்டில் முடிவுற்ற பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் உள்ளார்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஹைட்ரஜன் மூலம் இயங்கும் முதல் பயணிகள் படகு இங்கே தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் காசியிலும் இதே போன்ற ஹைட்ரஜன் படகுச் சேவை தொடங்கப்படும் என்று கூறினார். வ.உ.சி. துறைமுகத்தில் கடல்நீரைக் குடிநீராக்குதல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் ஆகிய வசதிகள் தொடங்கிப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். காங்கிரஸ் ஆட்சியின் கோரிக்கையாக இருந்தவை எல்லாம் இப்போது திட்டங்களாகச் செயல்பாட்டு வந்துள்ளன என்றும் தெரிவித்தார்.

மாநில அரசை விமர்சித்துப் பேசிய பிரதமர், “தமிழ்நாட்டில் மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன. மத்திய அரசு திட்டங்கள்பற்றிய செய்தித்தாள்களில் வெளியிடுவதை தமிழ்நாடு அரசு அனுமதிப்பதில்லை. இருந்தாலும் தடைகளை எல்லாம் தாண்டித் தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியே தீருவோம்” என உறுதி அளித்துள்ளார்.

”இன்று, தமிழகத்தில் நவீன சாலை வசதிகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 1,300 கி.மீ. தூரத்திற்கு ரயில்வே கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், இதே காலகட்டத்தில் 2,000 கி.மீ. ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. ரயில்வே பயணிகளின் வசதிக்காக நூற்றுக்கணக்கான மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், ரயில் நிலையங்களில் அனைத்து நவீன வசதிகளும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று மோடி பேசியிருக்கிறார்.

“கடல் துறையுடன், ரயில் மற்றும் சாலை தொடர்பான பல வளர்ச்சித் திட்டங்களும் இன்று இங்குத் தொடங்கப்பட்டுள்ளன. ரயில் பாதையை மின்மயமாக்குதல் மற்றும் இரட்டிப்பாக்கும் பணிகள் ஆகியவை தமிழகம் மற்றும் கேரளா இடையேயான இணைப்பை மேலும் மேம்படுத்தும். இன்று, நான் திறந்து வைத்துள்ள பெரிய திட்டங்கள், மாநிலத்தின் சாலை இணைப்பை மேம்படுத்தும், பயண நேரத்தைக் குறைக்கும், சுற்றுலா மற்றும் தொழில்துறையை மேம்படுத்தும்” என்று பிரதமர் கூறினார்.

“நாட்டின் முக்கிய கலங்கரை விளக்கங்களைச் சுற்றுலாத் தலங்களாக உருவாக்கலாம் என்று ஒருமுறை ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் கூறியிருந்தேன். இன்று பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள 75 கலங்கரை விளக்கங்களில் உருவாக்கப்பட்ட சுற்றுலா வசதிகளை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எதிர்காலத்தில் இவை நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா மையங்களாக மாறும் என்று நான் நம்புகிறேன்…” எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

விழாவில் பல திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டியிருக்கிறார். குறிப்பாகத் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 எந்திரமயமாக்கல், ரூ.124.32 கோடி மதிப்புடைய 5 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் எனப் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார். 10 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள 75 கலங்கரை விளக்கங்களைத் திறந்து வைத்துள்ளார்.

ரூ.1,477 கோடி செலவில் நிறைவடைந்துள்ள வாஞ்சி மணியாச்சி – நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை, நாடு முழுவதும் பல பகுதிகளில் ரூ.4,586 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாகத் தூத்துக்குடியில் மட்டும் ரூ.17,300 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, அமைச்சர் எ.வ.வேலு, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *