
புவனேஸ்வர்: ‘விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது காங்கிரஸ் மற்றும் சில கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை. இதனால் நான் தலைமை நீதிபதி வீட்டில் நடந்த விழாவில் கலந்து கொண்டதை பொறுக்க முடியாமல் விமர்சனம் செய்கின்றனர்’ எனப் பிரதமர் மோடி கூறினார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: ஒடிசாவில் இரட்டை இன்ஜின் ஆட்சி நடப்பதால் வளர்ச்சிக்கான பயணம் புதிய சிறகுகளைப் பெற்றிருக்கிறது. ஒடிசாவில் பழங்குடியின பெண் எனக்கு இனிப்பு ஊட்டியபோது என் தாயின் நினைவு வந்தது. அந்தப் பெண்ணின் ஆசிர்வாதம் போன்ற உணர்வுப்பூர்வமான அனுபவம் தான் என் வாழ்வின் மூலதனம். என் அம்மா உயிருடன் இருந்தவரை என் பிறந்தநாளுக்கு அவரிடம் ஆசி பெறுவேன்.
மக்களுக்குச் சேவை
ஒடிசாவில் ஏழை, தலித், ஆதிவாசி குடும்பங்களின் ஒவ்வொரு கனவும் நிறைவேறும். ஆட்சிக்கு வந்தபிறகு புரி ஜெகநாதர் கோவிலில் பொக்கிஷ அறையைத் திறந்தோம். ஜெகநாதரின் அருளால், ஒடிசாவுக்கு வந்து மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு எனக்கு மீண்டும் கிடைத்துள்ளது. மக்கள் இன்று விஸ்வகர்மா பூஜையைக் கொண்டாடுகின்றனர்.
பெண்களுக்கு அதிகாரம்
உழைப்பையும் திறமையையும் கொண்டாடும் ஒரே நாடு இந்தியா. அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்தகைய புனிதமான நாளில், ‘சுபத்ரா யோஜனா’ திட்டத்தைத் துவங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மாநில வளர்ச்சிக்குப் பெண்கள் அதிகாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மேம்பாட்டிற்காகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!
செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வீட்டிற்கு சென்றது ஏன்? என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது காங்கிரஸ் மற்றும் சில கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை.
இதனால் நான் தலைமை நீதிபதி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டதை பொறுக்க முடியாமல் விமர்சனம் செய்கின்றனர். அதிகாரப்பசி உள்ளவர்கள் நாட்டைப் பிளவுபடுத்த வேண்டும் என நினைப்பவர்கள், அதைப் பொறுக்க முடியாமல் விமர்சிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.



