
ஐந்து நாடுகள் பயணத்தில் இறுதியாக நமீபியாவுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பிலும், இந்திய வம்சாவளியினர் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரேசிலில் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து தனி விமானத்தில் புறப்பட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நமீபியாவுக்குச் சென்றுள்ளார்.
அந்நாட்டுத் தலைநகர் விண்ட்ஹோக்கில் உள்ள விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. நமீபிய அதிகாரிகளும் படைத் தலைவர்களும், இந்திய வெளியுறவு அதிகாரிகளும் பிரதமரை வரவேற்றனர்.
ஆப்பிரிக்கப் பழங்குடியினர் நடனமாடிப் பிரதமரை வரவேற்றனர். அவர்கள் இசைத்த பறையைப் பிரதமரும் முழக்கி அவர்களை ஊக்கப்படுத்தினார்.
நமீபியத் தலைநகர் விண்ட்ஹோக்கில் இந்திய வம்சாவளியினர் பிரதமர் நரேந்திர மோடிக்குச் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவர்கள் தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடி மோடி மோடி என்று முழக்கமிட்டனர். கூட்டத்தில் ஒருவர் தான் வரைந்த மோடியின் ஓவியத்தை அவருக்கு வழங்கினார். இந்தியர்களுடன் பிரதமர் மோடி உரையாடி மகிழ்ந்தார்.



