
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரிலிருந்து நியூ யார்க் புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீப்பிடித்ததால் பரபரப்பான சூழல் உருவானது.
ஜார்ஜ் புஷ் இன்டர்காண்டினென்டல் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட நிலையில், திடீரெனத் தீப்பிடித்துள்ளது.
விமானம் புறப்படத் தயாரானபோது அதன் இறக்கைகளில் ஒன்றிலிருந்து தீப்பிழம்புகள் வெளியேறின. இதையடுத்து விமானம் டேக் ஆஃப் ஆவது ரத்து செய்யப்பட்டது.
மேலும், விமானம் ஓடுபாதையிலிருந்து வெளியேற்றப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ஹூஸ்டன் தீயணைப்புத் துறை (HFD) தெரிவித்துள்ளது.
“விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் டேக் ஆஃப் ஆகும் முன் பிரச்சினை ஏற்பட்டதாகத் தகவல் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, ஹூஸ்டன் தீயணைப்பு துறையின் விமான நிலைய மீட்பு தீயணைப்பு வீரர்கள் களத்திற்கு விரைந்து சென்று, விமானத்தில் இருந்தவர்களை உடனடியாக வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த நேரத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை,” என்று ஹூஸ்டன் தீயணைப்பு துறை எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரக் காலத்திற்குள் அமெரிக்காவில் மட்டும் இரண்டு விமான விபத்துகள் அரங்கேறிய நிலையில், இந்தச் சம்பவம் விமானத்தில் இருந்த பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பயணிகளில் சிலர் தீப்பிழம்புகளைக் கண்டதும் அதனை வீடியோ பதிவு செய்தனர்.
இந்தச் சம்பவம் அரங்கேறிய விமானத்தில் 104 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் விமானத்தில் இருந்ததாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
