
புதுடில்லி: பார்லி.,யில் அத்துமீறியதாக கைதான 4 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடுமையான நடவடிக்கைகளுக்கு வழிவகை செய்யும் உபா சட்டத்தின் கீழ் டில்லி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
பார்லி.,யின் லோக்சபாவில் குளிர்கால கூட்டத்தொடரை பார்வையிட வந்த இருவர், திடீரென எம்.பி.,க்கள் இருந்த பகுதியில் புகுந்து குழல் வழியே பீய்ச்சியடிக்கும் வகையிலான புகையை பரப்பினர். அதேசமயம், பார்லி., வளாகத்தின் வெளியேயும் இருவர் ரகளையில் ஈடுபட்டனர்.
அத்துமீறலில் ஈடுபட்ட உத்தர பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த சாகர் சர்மா, கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன், ஹரியானாவின் ஹிசாரைச் சேர்ந்த நீலம் தேவி, மஹாராஷ்டிராவின் லத்துாரைச் சேர்ந்த அமோல் ஷிண்டே ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பார்லி.,யில் அத்துமீறியதாக கைதான 4 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடுமையான நடவடிக்கைகளுக்கு வழிவகை செய்யும் உபா சட்டத்தின் கீழ் டில்லி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். கிரிமினல் சதி, அத்துமீறல், வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வண்ணப்புகை குப்பி வீசியவர்களின் பின்னணியில் மேலும் சிலர் இருக்கலாம் என டில்லி போலீசார் சந்தேகப்படுகின்றனர். 4 பேரின் கல்வி பின்னணி, கடந்த கால நடவடிக்கை, சமூக ஊடக செயல்பாடுகளையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் மேலும் இருவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் 1967ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் தான் உபா சட்டம். அதாவது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் Unlawful Activities (Prevention) Act (UAPA).
எழுத்தின் மூலமாகவோ, பேச்சின் மூலமாகவோ, அல்லது வேறு வழிகளிலோ இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிராக யார் செயல்பட்டாலும் உபா சட்டத்தின் கீழ் வழக்கை போலீஸ் பதிவு செய்து வருகிறது.

