Pakistan:காதல் கண்ணை மறைத்தது…13 பேரை விஷம் வைத்துக் கொன்ற பெண்!

Advertisements

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்ப உறுப்பினர்கள் 13 பேரை இளம்பெண் விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கராச்சி:பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ந் தேதி ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 13 பேரும் உயிரிழந்தனர்.

பிரேத பரிசோதனையில் அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதுதொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. அதாவது உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இது அவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வாலிபரைத் திருமணம் செய்து வைக்கவும் மறுத்தனர்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த இளம்பெண், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தனது குடும்பத்தையே தீர்த்துக்கட்டும் சதிகாரியாக மாறியுள்ளார். இதற்கான திட்டத்தைத் தனது காதலன் யோசனைபடி அவர் அரங்கேற்றியுள்ளார். அதாவது வீட்டில் ரொட்டி சமைக்க பயன்படுத்தும் கோதுமை மாவில் விஷத்தைக் கலந்துள்ளார்.

இதுதெரியாமல் சம்பவத்தன்று அந்தக் கோதுமை மாவில் இளம்பெண்ணின் குடும்பத்தினர் ரொட்டி சமைத்து சாப்பிட்டு அனைவரும் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளம்பெண்ணை நேற்று போலீசார் கைது செய்தனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய், தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 13 பேரை இளம்பெண் விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *