
களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தேவையான தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
நெல்லை மாவட்டம் களக்காட்டில் 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்குப்பச்சையாறு அணையிலிருந்து தற்போது 48 அடி தண்ணீர் உள்ளது. பிசான பருவத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தததன் அடிப்படையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீரை திறக்க உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து இன்று காலையில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா முன்னிலையில் தமிழக சபாநாயகர் அப்பாவு நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆகியோர் வடக்குப் பச்சையாறு அணையில் இருந்து தண்ணீரை பிசான பருவத்திற்காக திறந்து வைத்தனர்.ழப அணையிலிருந்து இன்று முதல் வரும் மார்ச் 31ம் தேதி வரை தினமும் 100 கன அடிக்கு மிகாமல் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம், 9593 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.
பின்பு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அரசியலமைப்புச் சட்டத்தின் படியும் பேரவை விதியின்படியும் தான் சட்டமன்றம் நடக்கிறது. சட்டமன்றத்தில் இருக்கைகளை பொருத்தவரையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டும்தான் விதிப்படி அங்கீகரிக்கப்பட்ட இடம் உள்ளது. மற்ற யாருக்கும் அதனை கேட்க முடியாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

