கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் மேலாக அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்த ஓ பன்னீர்செல்வத்தின் எண்ணப்படியும் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்களின் விருப்பப்படியும் முதல் முதலாக அவரை அதிமுகவில் ஒருங்கிணைத்துக் கொள்ள எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவித்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியே கசிந்துள்ளது.
கடந்த ஆறு ஆண்டு காலமாக அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய போகிறார் என்ற செய்தியை தமிழக மக்களுக்கு முதன் முதலாக நமது ஜெம் தொலைக்காட்சி சிறப்பு செய்தியாக வெளியிட்டது நினைவிருக்கலாம்.கடந்த மாதம் 14ஆம் தேதி ஜெம் தொலைக்காட்சியில் இந்த செய்தியை ஜெம் தொலைக்காட்சி ஆணித்தரமாக வெளியிட்டது. கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு பிறகு அந்த செய்தி உண்மையாகி இருக்கிறது. தற்பொழுது விஜய் முன்னிலையில் நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து விட்டார்
விரைவில் அவருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தரலாம் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக நடிகர் விஜய் சொந்த செலவில் அவருக்கு இலவசமாக ஒரு புத்தம் புதிய கார் வழங்கப்பட்டிருக்கிறது என்பதும் முக்கிய தகவலாகும்.அந்த காரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனக்கென தனி பாணி பேச்சாற்றலை கொண்ட நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக்கழகத்திற்காக அதிரடி பிரச்சாரங்களை மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நீண்ட கால கோஷத்திற்கு இதுவரை மறுப்பு தெரிவித்து வந்த எடப்பாடி பழனிச்சாமி முதல் கட்டமாக தனக்கே உரிய புன்னகை பாணியில் ஓ பன்னீர் செல்வத்தை இணைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவலை ஜெம் தொலைக்காட்சி முதன்முதலாக வெளியிடுகிறது.தேனி பெரிய குளத்தில் உள்ள டீக்கடையில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர் ஓட்டைக்கார தேவர் பன்னீர்செல்வம்.
ஓட்டைக்கார தேவர் பன்னீர்செல்வம் என்பது தான் ஓ பன்னீர்செல்வம் என்றாகி தற்பொழுது ஓபிஎஸ் என மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்கிறார். தற்பொழுது 76 வயதாகும் ஓ பன்னீர்செல்வம் தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சராக மூன்று முறை பதவி வகித்தவர் தமிழ்நாட்டின் இரண்டாவது துணை முதலமைச்சர் என்ற பொறுப்பையும் வகித்து வந்தவர்.சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என பல பதவிகளை வகித்தவர் ஓ பன்னீர்செல்வம்சசிகலாவின் ஆதரவாளரான ஓ பன்னீர்செல்வம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கியவர்.
இளங்கலையில் பிஏ. பட்டம் பெற்ற ஓ பன்னீர்செல்வம் கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சி மன்ற தேர்தலில் அவரது சொந்த ஊரான பெரியகுளம் நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.இதன் பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்ந்து அவர் டான்சி வழக்கில் கைதான போது சசிகலாவின் சிபாரிசின் படி கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்றார்.இரண்டாவது முறையாக 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறைக்கு அனுப்பப்பட்ட போது மீண்டும் தமிழக முதலமைச்சரானார்.
பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை ஒட்டி மீண்டும் பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக தமிழக முதல்வரானார்.இதன் பின்னர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அப்பொழுது கட்டாயத்தின் பேரில் இந்த ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறன் என்று அறிவித்தார்.இதன் பின்னர் ஓ பன்னீர்செல்வம் சசிகலா என அதிமுகவில் பிளவு ஏற்பட்டது இதில் ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு அமைச்சர் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் என பத்து பேருடன் பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டார்.
இதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி உடன் ஓபிஎஸ் அணி இணைந்தது. அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி ஓ பன்னீர்செல்வம் துணை முதல்வராக பொறுப்பேற்றார் கடந்த 2021 ஆம் ஆண்டு வரை அந்த பதவியை பன்னீர் செல்வம் நிர்வகித்து வந்தார்.இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்திற்கும் ஏற்பட்ட கருத்து மோதல்களால் கடந்த 2022 ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூடி ஓ பன்னீர்செல்வத்தை கட்சியின் அடிமட்ட பதவி வரை விலகும் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் பின்னர் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஓ பன்னீர்செல்வம் பின்னர் மீண்டும் அதிமுகவிலிருந்து விலக்கி வைக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.இதற்கிடையே சசிகலா டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் என அதிமுக துண்டு துண்டாக சிதறியது.ஒரு பக்கம் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கினார் மறுபக்கம் ஓ பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து அரசியல் களத்தில் ஆறு முறை வெற்றி கண்ட அவர் முதன் முதலாக தேர்தலில் தோல்வியை தழுவினார்.
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா இன்று வரை அரசியலில் அதிமுக நிச்சயமாக ஒருங்கிணைப்பு ஏற்படும் என்று பேசி வருகிறார்.இந்த சூழ்நிலையில் அதிமுக பல தோல்விகளை சந்திக்க தொடங்கியது. மீண்டும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என குரல்களும் எதிரொலிக்க ஆரம்பித்தன.ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் வரை யாரையும் அதிமுகவின் மீண்டும் ஒருங்கிணைக்க முடியாது என்பதில் திட்டவட்டமாக இருந்து வந்தார்.அதிமுகவின் முன்னாள் முக்கிய அமைச்சராக செயல்பட்ட செங்கோட்டையன் போர்க் குரல் எழுப்பிய போதும் கூட கட்சியிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டாரே தவிர ஒருங்கிணைப்புக்கு வாய்ப்பே இல்லை என்று மறுத்து வந்தார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த சூழ்நிலையில் மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆலோசனையின் பேரில் வருகிற 15ஆம் தேதி புதிய கட்சி ஒன்றை எம்ஜிஆர் பெயரில் தொடங்கி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கலாமென ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டு வந்தார்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஓ பன்னீர்செல்வம் திடீரென டெல்லி சென்று அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.இந்த சந்திப்புக்கு முன்னதாக டெல்லி மேலிடத்திலிருந்து ஓ பன்னீர் செல்வத்திற்கு திடீர் அழைப்பு வந்தது அந்த அழைப்பின் பேரில்தான் ஓ பன்னீர்செல்வம் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
சுமார் 25 நிமிடங்கள் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது அப்பொழுது அதிமுகவை ஒருங்கினைக்க வேண்டும் தற்பொழுது தமிழக அரசியல் சூழ்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது ஆனால் அதிமுகவை ஒருங்கிணைத்து விட்டால் பாஜக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது என ஓ பன்னீர்செல்வம் தனது கருத்தை தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் அதற்கு முன்பாகவே உள்துறை அமைச்சர் அமித்ஷா எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொண்டு ஓ பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று பேசி இருக்கிறார் இதற்கு எடப்பாடி பழனிச்சாமியும் சில கோரிக்கைகளை வெளிப்படுத்தி அதன்படி ஓ பன்னீர்செல்வம் நடந்து கொண்டால் அவரை அதிமுகவில் இணைத்துக் கொள்ளலாம் என பேசியதாக தெரிகிறது.
முதலில் ஓ பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்ட டிடிவி தினகரன் சசிகலா செங்கோட்டையன் ஆகியோருடன் தொடர்பு வைக்கக் கூடாது என எடப்பாடி பழனிச்சாமி கண்டிஷன் தெரிவித்திருக்கிறார். இதில் மிகப்பெரிய திருப்புமுனை என்னவென்றால் டிடிவிதினகரன் சசிகலா செங்கோட்டையன் ஆகிவருடன் வாரத்துக்கு இரண்டு முறை ஓ பன்னீர்செல்வம் தொடர்பில் இருந்தார் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கைக்கு சம்மதம் தெரிவிப்பதாக சொல்லி இருக்கிறார்
இந்த நிலையில்,கடந்த ஒரு வாரமாக தன்னுடன் பேசவில்லை என ஓ பன்னீர்செல்வம் மீது செங்கோட்டையின் கோபத்தில் இருக்கிறார் என்பது ரகசிய செய்தியாகும்.இதற்கிடையே,வருகிற 10-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதால் அவசர அவசரமாக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்திருக்கிறது என்கிறார்கள்.ஓ பன்னீர்செல்வத்தை பொருத்தவரையில் 15ஆம் தேதி புதிய அமைப்பு தொடங்கினால் அது கூட்டணிக்கு ஒத்து வராது அதே சமயம் அதிமுகவுடன் அவரை ஒருங்கிணைத்தால் தொண்டர்கள் மத்தியில் புதிய எழுச்சி ஏற்படும் என்கிற ஆலோசனை அடிப்படையில் ஓ பன்னீர்செல்வம் விரைவிலேயே அதிமுகவில் இணைத்துக் கொள்வதற்கான சூழ்நிலைகள் தற்போது ஏற்பட்டு இருக்கின்றன.
முன்னதாக டெல்லியில் ஓ பன்னீர்செல்வத்துடன் அமித்ஷா நடத்திய பேச்சு வார்த்தையின் போது இன்னும் இரண்டு வாரத்தில் நான் சென்னை வருகிறேன் அப்பொழுது இதைப் பற்றி பேசுவோம் என்று சொல்லியிருக்கிறார்.இந்த நிலையில் அடுத்த வாரம் சென்னை வரும் அமித்ஷா இங்குள்ள அதிமுக தலைவர்களையும் பாஜக தலைவர்களையும் சந்தித்து பேச இருக்கிறார்.அப்பொழுது பிரேமலதா விஜயகாந்த் அன்புமணி ஜான் பாண்டியன் ஏ சி சண்முகம் ஆகியோரையும் அவர் சந்தித்து பேசப் போவதாக தெரிகிறது
அதாவது வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த வாரம் இறுதி முடிவு அறிவிப்பார் என தெரிகிறது.முன்னதாக ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசிய அமித்ஷா இதனை தொடர்ந்து அண்ணாமலையையும் அழைத்து பேசினார். அண்ணாமலை இடம் அழருக்கு முக்கிய அரசியல் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் தற்பொழுது அதிமுக கூட்டணியல ஒருங்கிணைக்கும் பணிகளை தீவிரமாக செய்யும் படியும் அமித்ஷா உத்தரவிட்டதாக தெரிகிறது.
எனவே அடுத்த வார இறுதியில் தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பு திருப்பம் ஏற்பட இருக்கிறது இதுவரை துவண்டு போயிருந்த அதிமுக மீண்டும் எழுச்சி பெற போகிறது எனவும் டெல்லி பாஜக மேலிடம் தகவல் தெரிவித்துள்ளன.இதில் மிகப்பெரிய திருப்புமுனை என்னவென்றால் வருகிற 10-ஆம் தேதி அதிமுக சார்பில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கூட ஓ பன்னீர்செல்வத்தை இணைத்துக் கொள்வது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்பதுதான் பரபரப்பு நிறைந்த அதிரடி செய்தியாகும்.இதனால்தான் “நான் புதிய கட்சி தொடங்கப் போவதாக எப்போது சொன்னேன்?” என்று பத்திரிகையாளர்களிடம் ஓ பன்னீர்செல்வம் பல்டி அடித்திருக்கிறார் என்பது இறுதிக் கட்ட செய்தியாகும்.


