Omar Abdullah: பா.ஜ.,வின் ‘சி’ டீமாக இணைந்த மெகபூபா கட்சி: உமர் அப்துல்லா விமர்சனம்!

Advertisements

அனந்த்நாக்: மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), பா.ஜ., வின் ‘சி’ டீமாக இணைந்துள்ளதாகத் தேசிய மாநாட்டுத் தலைவர் உமர் அப்துல்லா கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 5 லோக்சபா தொகுதிகளுக்கும் முதல் 5 கட்ட தேர்தல்களில் தலா ஒரு தொகுதியில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. அங்குத் தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரசும் ‘இண்டியா’ கூட்டணியின் கீழ் ஒன்றிணைந்து போட்டியிடுகின்றன. இதில் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும் (பிடிபி) இண்டியா கூட்டணிக்கு ஆதரவளித்தாலும், மாநிலத்தில் தனித்தே போட்டியிடுகிறது.
இந்த நிலையில், பா.ஜ., தலைவர் முஷ்தாக் பஹாரி பிரசாரம் செய்கையில், ‘மக்கள் ஜனநாயக கட்சிக்கு, பஹாரி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஓட்டளிக்க வேண்டும்’ என வலியுறுத்தினார். பா.ஜ., வேட்பாளரை விடுத்து, வேறு கட்சிக்கு ஆதரவளித்தது விவாதமானது.

இது தொடர்பாகத் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா கூறியதாவது: இங்கே பா.ஜ., வைத்தோற்கடிக்க வேண்டும், நாடு முழுவதும் விஷத்தைப் பரப்பும் சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், ஜம்மு காஷ்மீரின் ஐந்து தொகுதிகளிலும் இண்டியா கூட்டணியை மக்கள் வெற்றியடைய செய்ய வேண்டும்.

மற்ற கட்சிகள் எல்லாம் ‘ஏ’ டீம், ‘பி’ டீம் என ஏதோ ஒரு வகையில் ஒன்றிணைந்துள்ளன. அந்த வகையில் தற்போது மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும் பா.ஜ., வில் ‘சி’ டீமாக இணைந்துள்ளன. லடாக் தொகுதியில் பா.ஜ., வெற்றிப்பெற வாய்ப்பில்லை. அத்தொகுதியில் நாங்களும் – காங்கிரசும் சேர்ந்து சரியான வேட்பாளரை நிறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *