Omar Abdullah: டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுத் திட்டம்.. உமர் அப்துல்லா குற்றச்சாட்டு!

Advertisements

புதுடெல்லி: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய பாரதிய ஜனதா அரசு திட்டமிட்டு வருவதாக உமர் அப்துல்லா குற்றம் சாட்டினார்.

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் மாநாடு உமர் அப்துல்லா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதுபற்றிக் கூறியதாவது:-

“ஒரு முதல்வர் கைது செய்யப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன், சில வாரங்களுக்கு முன், ஜார்கண்ட் முதல்வரும் எங்கள் நண்பருமான ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட உள்ளதை அறிந்த அவர், ஆளுநர் மாளிகைக்குச் சென்று பதவியை ராஜினாமா செய்தார். இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பது அவருக்குத் தெரியும்.

முதல்வராகவே அவர் கைது செய்யப்பட்டிருந்தால், அரசியல் சாசனத்தைப் பயன்படுத்தி பாஜக, அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி இருக்கும்.

டெல்லி விஷயத்தில் தற்போது அதுதான் எனது கவலை. சிறையில் இருந்தாலும் கேஜ்ரிவால் முதல்வராகத் தொடருவார் என்பது ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடு என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவு தொடருமானால், அதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பாஜக டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்.

ஒரு முதல் அமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவது முதல் நபர் அல்ல; அவர் கடைசி நபரும் அல்ல. இது தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.

அன்னா ஹசாரே:

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதுதொடர்பாகச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, “அரவிந்த் கேஜ்ரிவாலால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். மதுவுக்கு எதிராக என்னுடன் இணைந்து பணியாற்றியவர்; குரல் கொடுத்தவர். தற்போது அவர் மதுபான கொள்கைகளை வகுத்து வருகிறார். கெஜ்ரிவாலின் கைதுக்கு அவரது செயல்களே காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவாலின் அரசியல் பிரவேசம்!

கடந்த 2011ம் ஆண்டு அன்னா ஹசாரே இயக்கத்தில் இணைந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஊழலுக்கு எதிராக ஹசாரே டெல்லியில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திலும் கலந்து கொண்டார். இதன்மூலம் கவனம் ஈர்த்த கெஜ்ரிவால், பின்னர் 2012-ல் ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கினார்.

அதன் பின் டெல்லியில் மட்டுமின்றி பஞ்சாப் மாநிலத்திலும் அவருடைய கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. தற்போது அரியானா கோவா குஜராத் எனப் பக்கத்து மாநிலங்களிலும் அவருடைய கட்சி தனது செல்வாக்கை விரிவு படுத்தி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *