
அரசு பொது சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் ஓமலூர் காவல் நிலையம் முன்பாகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டியில் பல ஆண்டுகளாகப் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தி வந்த பேருந்து நிழற் கூடத்தைத் தனிநபர் ஒருவர் இடித்துத் தரைமட்டம் ஆகியுள்ளார்.
நிலத்தை ஆக்கிரமிக்க அரசு பொது சொத்துக்களை சேதம் விளைவித்த நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்து எந்தப் பயனும் இல்லாததால் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் தர்ணா போராட்டத்தை அறிவித்தார்.
ஓமலூர் பேருந்து நிலையத்திலிருந்து அருள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் காவல் துறையைக் கண்டித்து முழக்கம் இட்டவாறு ஊர்வலமாகச் சென்றனர்.
ஓமலூர் காவல் நிலையம் முன்பாகச் சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கண்ணன் அருளிடம் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது இல்லையென்றால் ஒரு வாரக் காலத்திற்குப் பிறகு பல இடங்களில் போராட்டம் நடைபெறும் என்றும் அவர் எச்சரித்தார்.
சேலத்தில் பல இடங்களில் அரசு பொது சொத்துக்களை வீணாகும் போக்கினை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் வேடிக்கை பார்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்தப் போராட்டத்தில் மாணவர் மாவட்ட தலைவர் கதிர் ஆசரத்தினம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைவர் மாணிக்கம் பசுமைத்தாயக மாநில இணை செயலாளர் சத்ரிய சேகர் நிர்வாகிகள் கே.சி ஆறுமுகம் அண்ணாமலை, பாபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


