புதுடெல்லி: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. டெல்லி, அரியானா, இமாச்சல பிரதேசம் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கிருந்து வெளியேறிய தண்ணீர் அரியானாவின் அத்னிகுண்ட் தடுப்பணைக்கு வந்தது. அந்த தண்ணீர் யமுனை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் யமுனையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் டெல்லி நகருக்குள் புகுந்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் மார்பளவு தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளுக்கு உதவவும் 4500-க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. டெல்லியில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
வெள்ளத்தில் சிக்கிய பலர் உணவு இல்லாமல் பட்டினியில் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு தன்னார்வலர்கள், மீட்பு படையினர் உதவி வருகின்றனர். இந்தநிலையில் கனமழை ஓய்ந்ததால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஓரளவு குறைந்தது. ஆனால் இன்று மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.