சினிமாவில் நடிகர், நடிகைகளிடையே காதல் மலர்வதுண்டு, ஆனால் திருமணமான நடிகர்மீது நடிகை ஒருவர் காதலில் விழுந்ததால் அவரது கெரியரே குளோஸ் ஆகிவிட்டது.
பகத் பாசில் ஹீரோவாக அறிமுகமான கையேதும் தூரத்து என்கிற மலையாள படம்மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நிகிதா துக்ரல். அப்படம் பிளாப் ஆனதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நிகிதா, விஷ்ணுவர்தன் இயக்கிய குறும்பு படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார்.
பின்னர் சத்ரபதி, வெற்றிவேல் சக்திவேல் போன்ற படங்களில் நடித்த நிகிதாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது சரோஜா படம் தான். வெங்கட் பிரபு இயக்கிய அப்படத்தில் ‘கோடான கோடி’ என்கிற பாடலுக்கு நிகிதா ஆடிய கவர்ச்சி நடனம் வேறலெவலில் ஹிட்டானது.
பின்னர் கன்னட சினிமாவில் காலடி எடுத்து வைத்த நிகிதா, அங்குப் புனீத் ராஜ்குமார், உபேந்திரா, கிச்சா சுதீப் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்னர் யோதா, பிரின்ஸ் போன்ற கன்னட படங்களில் நடித்தபோது அப்படத்தின் ஹீரோ தர்ஷனுக்கும் நிகிதா துக்ரலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாகவும் மாறி இருக்கிறது. இதில் சிக்கல் என்னவென்றால் நடிகர் தர்ஷன் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு மனைவி, குழந்தை உள்ளது. தர்ஷன் – நிகிதா துக்ரல் இடையேயான காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி போலீஸில் புகார் அளித்தார்.
தர்ஷன் தன்னை அடித்து, துன்புறுத்துவதாகவும், அவரைக் கைது செய்யக்கோரி புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் தர்ஷனும் கைது செய்யப்பட்டார். மறுபுறம் நடிகை நிகிதா துக்ரல் கன்னட சினிமாவில் நடிக்கத் தடைவிதிக்க வலியுறுத்தியும் விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் நடிகை நிகிதா துக்ரல் கன்னட சினிமாவில் நடிக்க மூன்று ஆண்டுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர்மீதான தடை நீக்கப்பட்டாலும் மார்க்கெட் போனதால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் திண்டாடிய நிகிதா, கடந்த 2017-ம் ஆண்டுத் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். தற்போது அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். தர்ஷன் விவகாரத்துக்குப் பின் நிகிதா சினிமாவில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
