Narendra Modi: காஷ்மீரில், அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வரத் தயாரா? – காங்கிரசுக்கு பிரதமர் மோடி சவால்!

Advertisements

உதம்பூர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டு வருவோம் என சொல்ல காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தயாரா? என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் இது பற்றி கூறியதாவது:-

“இந்தத் தேர்தல் வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் மட்டுமல்ல; நாட்டில் பலமான அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தலாகும். அரசு பலமாக இருக்கும்போது, சவால்களை சவாலுக்கு உட்படுத்தி பணிகளை முடிக்க முடியும்.

என்னை நம்புங்கள், 60 ஆண்டுகால பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என்று கூறியிருந்தேன். இங்குள்ள தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு நான் மரியாதை அளித்தேன். இரண்டு வேளை உணவுக்காக ஏழைகள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நான் உத்தரவாதம் அளித்தேன். இன்று ஜம்மு காஷ்மீரின் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் உத்தரவாதம் உள்ளது.

மோடியின் உத்தரவாதம் என்பது நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம். காங்கிரஸின் பலவீனமான அரசாங்கங்கள் ஷாபுர்கண்டி அணையை பல தசாப்தங்களாக முடக்கி வைத்தது உங்களுக்கு நினைவிருக்கும். ஜம்மு விவசாயிகளின் வயல்கள் காய்ந்து, கிராமங்கள் இருளில் மூழ்கின. அதேநேரத்தில், நமது ராவி ஆற்றின் தண்ணீர் பாகிஸ்தானுக்குப் போய்க்கொண்டிருந்தது. அந்த தண்ணீரை ஜம்மு விவசாயிகளுக்கு வழங்குவதற்கான உத்தரவாதத்தையும் நிறைவேற்றி இருக்கிறேன்.

காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, பிடிபி மற்றும் அனைத்து கட்சிகளும் ஜம்மு காஷ்மீரை பழைய காலத்துக்கு கொண்டு செல்ல விரும்புகின்றன. ஜம்மு காஷ்மீருக்கு இந்த குடும்பங்கள் நடத்தும் கட்சிகள் செய்த அளவுக்கு சேதத்தை யாரும் ஏற்படுத்தவில்லை. இங்கு அரசியல் கட்சி என்பது குடும்பம், குடும்பம் மற்றும் குடும்பத்துக்கானது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் அரசியல் சட்டப் பிரிவு 370 நாங்கள் ரத்து செய்து இருக்கிறோம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் காங்கிரஸ் அல்லது மற்ற எதிர்க்கட்சிகள் இந்த சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என்று சொல்ல தயாரா? இதை சவாலாக அறிவிக்கிறேன்”.

இவ்வாறு மோடி கூறினார்.

விரைவில சட்டமன்ற தேர்தல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்றும் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *