Narendra Modi: பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு சென்னையில் வாகன சோதனை தீவிரம்!

Advertisements

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லாட்ஜுகள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

விமான நிலையம் மற்றும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் ஆகியவை மத்திய போலீஸ் படையின் முழு கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் சென்னை வருகிறார். இதையொட்டி மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது.

சந்தேகத்துக்கு இடமாக யாராவது சுற்றித்திரிகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லாட்ஜுகள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது லாட்ஜ்களில் தங்கி உள்ள வர்கள் எதற்காக தங்கி இருக்கிறார்கள்? அவர்கள் கொடுத்துள்ள முகவரி உண்மையானது தானா? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பிரதமர் மோடி இன்று பிற்பகலில் சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்திற்கு செல்கிறார். இதைத் தொடர்ந்து அவர் காரில் பயணிக்கும் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு வழி நெடுக போலீசார் நேற்று இரவில் இருந்தே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள உயரமான கட்டிடங்களில் இன்றும் கண்காணித்து வருகிறார்கள். சென்னை விமான நிலையம் மற்றும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் ஆகியவை மத்திய போலீஸ் படையின் முழு கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இதே போன்று கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடலோரங்களிலும் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் வருகையொட்டி நேற்று பிற்பகலில் விமான நிலையத்தில் இருந்து நந்தனம் வரையில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதே போன்று சென்னையில் இருந்து கல்பாக்கம் வரையில் 3 ராணுவ ஹெலிகாப்டர்களும் ஒத்திகையில் ஈடுபட்டு கண்காணித்தன.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதமர் மோடி இன்று சென்னை பொதுக் கூட்டத்தை முடித்துவிட்டு தெலுங்கானாவுக்கு புறப்பட்டு செல்லும் வரையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பெயரில் அனைத்து உயர் போலீஸ் அதிகாரிகளும் சென்னை மாநகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *