தவெக ஆட்சியில் ரீல்ஸ் மோகம்! நயினார் நாகேந்திரன் காட்டம் !

தவெக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என அனைவரும் தங்களது கடமைகளை விட ‘ரீல்ஸ்’ வெளியிடுவதில்தான் கவனம் செலுத்தி வருவதாகப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல் நிலையம் என்பது பொதுமக்களின் பாதுகாப்பிற்கான நிர்வாக மையமே தவிர, ஆளுங்கட்சியினர் விளம்பரம் தேடும் படப்பிடிப்புத் தளம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட தக்கோலம் காவல் நிலையத்திற்குள் நள்ளிரவில் ‘ஆய்வு’ என்ற பெயரில் புகுந்த அமைச்சர் காந்திராஜ், பணியில் இருந்த சீருடைப் பணியாளர்களையும், குறிப்பாக ஒரு பெண் காவலரையும் மிரட்டும் தொனியில் பேசி, அதனைத் திரைப்படப் பாடலுடன் ‘ரீல்ஸ்’ வீடியோவாக வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார். கூட்டுறவுத் துறையை நிர்வகிக்க வேண்டிய அமைச்சர், நள்ளிரவில் காவல் நிலையத்திற்குள் சென்று அதிகாரத் தோரணையில் பேசியிருப்பது அப்பட்டமான அதிகாரத் துஷ்பிரயோகமாகும் என்று தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என அனைவரும் தங்களது கடமைகளை விட ‘ரீல்ஸ்’ வெளியிடுவதில்தான் கவனம் செலுத்தி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். எனவே உடனடியாக அந்த வீடியோவை நீக்கவும், அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்கவும் உத்தரவிடுவதோடு, இனி அமைச்சர்கள் அதிகார வரம்பை மீறாமல் செயல்படுவதைத் முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *