
நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி சபரிவர்மன் உயிரிழந்த விவகாரத்தில் வார்டன் உள்பட 3 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன், தனது கடையில் குட்கா பொருட்களை விற்றதாகக் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக் காவலில் மரணமடைந்துள்ளார்.
அவர் கைது செய்யப்படும்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த நிலையில், விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டபோது உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அவரை அடித்தே கொலை செய்துவிட்டதாகவும் கூறி சபரிவர்மனின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, மாவட்ட நீதிபதி முன்னிலையில் நடத்தப்பட்ட உடற்கூராய்வில் சபரிவர்மனின் உடலில் 19 காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, மாவட்ட சிறைத் தலைமை வார்டன் ஜெகன், சிவகுமார், திருவிடைநம்பி ஆகிய மூவரைக் கைது செய்து காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



